பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14

மான அவ்வையின் பெயரைத் தாங்கிக்கொண்டு, கல்ராயன் மலைத்தொடரில் ‘அவ்வை மலை’ என்ற ஒன்று இன்றுமுளது. இவ்வாறு சேரர் குடியினர்க்கு உரிமை பெற்று விளங்கிய இம்மாவட்டம் பண்டை நாளில் ‘சேரலம்’ என்று வழங்கி, இன்று சேலமாக மாறிவிட்டது என்றும், சேரராசன் ஆட்சிக்கு உட்பட்டிருந்த மலை ‘சேரராசன் மலை’ என்ற பெயர்கொண்டு விளங்கி, இன்று சேர்வராயன் மலையாகிவிட்டது என்றும் கொள்வது ஏற்புடைத்தாம். சேலம் மாவட்டத்தில் உள்ள மலைகளில் உயர்விலும், வளத்திலும் சிறந்தவை சேர்வராயன் மலைகள்.

அமைப்பு

மல்லாபுரம் மலைத்தொடருக்கும் மஞ்சவாடிக் கணவாய்க்கும் இடையில் இம்மலைகள் பரந்து கிடக்கின்றன. இம்மலைத் தொடர் பதினேழு கல் நீளமும் பன்னிரண்டு கல் அகலமும் உடையது. இதன் பரப்பு 100 சதுர மைல் ஆகும். இத்தொடரின் தென் சரிவு செங்குத்தானது. கடல் மட்டத்திலிருந்து 4000 அடியிலிருந்து 4800 அடிவரை உயரமுடையது. இச்சரிவில் குண்டூர், தப்பக்காடு என்ற சிற்றூர்கள் இருக்கும் இடமும், பழமலை உயர்ந்து செல்லும் இடமுமே சமவெளிகளாம். ஆனால் வடசரிவு செங்குத்தானதல்ல. அது பரந்து சிறிது சிறிதாகத் தாழ்ந்து செல்லுகிறது.

இம்மலைத் தொடரானது நடுவில் ஓடும் வாணியாற்றின் பள்ளத்தாக்கால் இரண்டு பிரிவாகப் பிரிக்கப்படுகிறது. இவ்விரண்டு பிரிவுகளும் அமைப்பில் வேறுபடுகின்றன. கிழக்குப்பகுதி மழை நீரால் அரிக்கப்பட்ட் ஆற்றுப்படுகைகளைக் கொண்டது. மேற்குப்பகுதி பருத்து உயர்ந்த மலைகளைக் கொண்டது. கிழக்குப் பகுதியில் தலைச்சோலை, மாறமங்கலம் என்ற