பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

201

காகப் பெருந் தொகையை நன்கொடையாக வழங்கினார். அப்போது இந்திய நாட்டின் மக்கள் தலைவராக (Governor General} விளங்கிய கர்சன் பிரபு அந் நன்கொடையின் பொறுப்பாளராக இருந்தார். அத் தொகையிலிருந்து ஒரு லட்சம் ரூபாயை, தென்னாட்டில் பாஸ்டர் கழகம் நிறுவுவதற்காக வழங்கினார். அப்போது சென்னை மாநில ஆளுநராக விளங்கிய ஆம்ப்தில் பிரபு (Lord Ampthill) அப் பணியில் அதிக அக்கறை காட்டினார். சென்னையில் சிறந்த மருத்துவ நிபுணராக விளங்கிய டபிள்யு. ஆர். பிரௌன், ஐ.எம்.எஸ், (W. R. Brown, I.M.S.) என்பாரையும், ஜி. ஆரிஸ் (G. Harris) என்ற கட்டிட நிபுணரையும் கூனூருக்கு அனுப்பி, ஒரு சிறந்த இடத்தைத் தேர்ந் தெடுத்து, பாஸ்டர் நிறுவனத்தை அமைக்குமாறு பணித்தார். இப்போது, இந் நிறுவனம் நல்ல முறையில் வளர்ச்சி பெற்று, பல இன்றியமையாத ஆராய்ச்சிகளைச் செய்துகொண்டிருக்கிறது. வெறி நாய்க் கடியினால் தாக்குண்ட ஆயிரக் கணக்கான மக்கள் இங்குச் சிறந்த சிகிச்சை பெறுகின்றனர்.

பிற காட்சிகள் :

கூனூரில் காண்டற்குரிய வேறு பல இடங்களும் உள்ளன. புலிமலை (Tiger's Hill), வாக்கர்ஸ் மலை (Walker's Hill), புரூக்லேண்ட்ஸ் பாதை (Brooklands Road) ஆகியவை குளிர்ந்த நிழல் தரும் மரங்களடர்ந்த காடுகளின் நடுவில் அமைந்துள்ளன. உதகமண்டலத்திலிருந்து புறப்பட்டு, கெயிட்டி பள்ளத்தாக்கு, அரவங்காடு, கூனூர், கிளன் மோர்கன் தேயிலைத் தோட்டம், காட்டேரி அணை ஆகியவற்றின் வழியாகச் சென்று மறுபடியும் உதகமண்டலத்தை அடையும் சுற்றுச் செலவு (Round trip) உள்ளத்திற்கு மிகவும் இன்பம் பயக்கக்கூடியதாகும். கூனூருக்கு 6 கல் தொலைவிலிருந்து அழகிய குந்தா மலைத்தொடர்