பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

206

கொண்டது. கம்பம் பள்ளத்தாக்கிலிருந்து காண்போருக்கு அச்சரிவிலுள்ள பாறைகள் பெரிய சுவர்கள் போல் காட்சியளிக்கும். அப்பாறைகளினிடையே பெரும்பெரும் பள்ளங்கள் அமைந்துள்ளன. அடிவாரத்திலிருந்து காண்போருக்கு அக்காட்சி வியப்பூட்டும் என்பதில் ஐயமில்லை. வட பகுதியில் அமைந்துள்ள இருபெரும் பள்ளத்தாக்குகள் அப்பீடபூமியை இடையறுத்துக் கொண்டு வில்பட்டி, பூம்பாறை ஆகிய சிற்றூர்கள் வரை தெற்கு நோக்கிச் செல்லுகின்றன. சமவெளியிலிருந்து இவ்விரு பள்ளத்தாக்குகளின் வழியாக மலையுச்சியை வந்தடையும் இரு குறுகிய பாதைகளும் குறிப்பிடத்தக்கவை. இம் மலையோடு நெருங்கிய வாணிபத் தொடர்பு கொண்ட நகரம் 'பழனி' ஆகும். பழனியிலிருந்து புறப்படுவோர் கால் நடைகளின் மீது பொதிகளை ஏற்றிக்கொண்டு இப்பாதைகள் மூலமாகவே உச்சியை அடைவர். பழனியிலிருந்து வில்பட்டி செல்லும் மலைவழிப் பாதை அடிக்கடி குறுகிய பள்ளங்களால் இடையறுக்கப்படுவதால், குதிரைகள் இவ்வழியாகச் செல்ல முடிவதில்லை. ஆனால் பூம்பாறைக்குச் செல்லும் மலைவழிப்பாதை செல்லுவதற்கு எளிதானது. பெரியகுளத்திலிருந்து கோடைக்கானல் செல்லும் குதிரைப் பாதை (bridle path)' அமைக்கப்பட்டதும், மேற்கூறிய இரு பாதைகளும் கவனிப்பாரற்றுச் சீர் கெட்டுப் போயின. குதிரைப் பாதையும் லாஸ் பாதை (Law's Ghat)யும், புதிய ஆத்தூர்ப்பாதையும், கோடைக்கானல் குடியிருப்புகளை இணைக்கும் பாதைகளுமே பழனி மலைமீது புழக்கத்திலிருந்தவை. இப்போது ஓரளவு சீரான பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஓர் ஊரிலிருந்து மற்றோர் ஊருக்குச் செய்தி அறிவிக்கும் வேலையானது, கரடு முரடான மலைவழிப் பாதைகளின் மூலமும், கடப்பதற்கரிய காட்டுவழிகளின் மூலமுமே. நடைபெற்றன.