பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

212

ளது. காட்டுச் சட்டத்தின் (Forest Act)படி இங்குள்ள காடுகள் அரசியலாரால் பாதுகாக்கப்படுகின்றன, இப்பீடபூமிக்கு, ஆம்ப்தில் வெளி, ( Ampthill downs) என்று பெயரிட்டிருக்கின்றனர். இதன் பரப்பு 5 சதுரமைல், இப்பீடபூமியின் கால்பகுதி காடுகள். முக்கால் பகுதி பரந்த பசும்புல் வெளிகள். இங்கு 7000 அடி முதல் 8000 அடிவரை உயரமுள்ள சிறிதும் பெரிதுமான பல சிகரங்கள் தென்படுகின்றன. இம் மா நிலத்திலுள்ள மிகவும் அழகிய மலைவெளிகளில் ஆம்ப்தில் வெளியும் ஒன்று.

பழனிமலையின்மீது பல இடங்களில் செயற்கை முறையில் காடுகள் வளர்க்கப்படுகின்றன. கி. பி. 1870-ஆம் ஆண்டு கேம்பெல் வாக்கர் (Colonel Compbell Walker) என்பவர், பழனிமலையின் வடபுற அடிவாரத்தில் உள்ள வேலன் கோம்பை என்ற இடத்திலும், பெரியாற்று ஏரிக்கருகிலுள்ள அடிவாரமாகிய வண்ணாத்திப்பாறை என்ற இடத்திலும் தேக்கு மரங்களைப் பயிரிட்டார். அவ்விடத்தில் ஏறக்குறைய 4500 மரங்கள் வளர்ந்தன. ஆனால், தேக்கு பயிரிடுவதற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட அவ்விடங்கள், தென் மேற்குப் பருவக்காற்றினால் பெய்யும் மழையின் முழுப் பயனையும் பெறுவதில்லை. வேலன் கோம்பையில் வளர்க்கப்பட்ட தேக்குக் காடுகள், அப்பக்கமாக ஓடிவரும் கால்வாயினால் நல்ல நீர் வளத்தைப் பெற்றிருந்தன. ஆனால் அடிக்கடி ஏற்படும் பெருவெள்ளத்தால் நிறைய மரங்கள் அழிவுற்றன, அதே ஆண்டில் கோடைக்கானலில் நீலப் பிசின் மரங்க (Blue gum trees}ளும், ஆஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்த கருமரங்களும் பயிரிடப்பட்டன. கோடைக்கானலில் வாழும் மக்களுக்கு எரிபொருள் வழங்குவதற்கும், அங்குள்ள அழகிய இளமரக் காட்டை அழிவுறாமல் காப்பதற்குமே இவைகள் பயிரிடப்பட்டன. இவ்விடமும் இம்மரங்களின் வளர்ச்சிக்கு ஏற்றதாக இல்லை.