பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

216

புகுந்ததாகக் கூறப்படுகிறது. கோவை மாவட்டத்திலுள்ள குன்னூர் என்ற சிற்றூரின் பெயரே தங்கள் குடிப்பெயராக அமைந்ததென்று காரணம் கூறுகின்றனர். குன்னுவர் பழனிமலையில் குடிபுகுந்தது பற்றி வேறொரு செய்தியும் வழங்குகிறது. விரூபாட்சி, ஆயக்குடி ஆகிய இடங்களில் வாழ்ந்த போலிகர் என்னும் வகுப்பார் மலைமீதுள்ள தங்களுடைய நிலங்களில் பணிபுரிவதற்காக இவர்களை இங்குக் குடியேற்றினார்கள். அதுவரையில் அந்நிலங்களில் பணிபுரிந்து வந்தவர்கள் புலையர் என்னும் குலத்தார். அவர்கள் சோம்பேறிகள். குன்னுவர் அவர்களைத் துரத்திவிட்டு, அவர்கள் இடத்தைக் கைப்பற்றிக் கொண்டனர். அதோடு அவர்களை மாறாத அடிமைகளாகவும் ஆக்கிக்கொண்டனர்.

குன்னுவர் வாழும் ஒவ்வோர் ஊரிலும் அவர்களுடைய சமூகவியலை மேற்பார்க்க ஒரு தலைவனுண்டு. அவனுக்கு ‘மண்ணாடி' என்று பெயர். ஊரில் அவன் மிகவும் செல்வாக்கு மிக்கவனாகக் கருதப்படுகிறான். இவ்வினத்தார், குன்னுவர், பெரிய குன்னுவர், சின்னக் குன்னுவர் என முப்பிரிவாகப் பிரிந்து வாழ்கின்றனர். இப்பிரிவுகளுக்கு 'வகுப்பு'க்கள் என்று பெயர். ஒரு வகுப்பினர் மற்ற வகுப்பினரோடு மண உறவு கொள்ளும் வழக்கம் இல்லை. ஆனால் ஒன்றாக அமர்ந்து உண்ணுவர். குன்னுவப் பெண் அணியும் உடை ஒரு மாதிரியாக இருக்கும். அவர்கள் தங்களுடைய மேலாடையால் மார்பைப் போர்த்து முன்னால் முடியிட்டுக் கொண்டு, அவ்வாடையையே இடுப்பில் சுற்றிக்கொள்கின்றனர். உலோகத்தால் செய்த கழுத்தணிகளையும், பித்தளையால் செய்த வளையல், கொலுசுகளையும், வெள்ளியினாற் செய்த கடகம் மூக்கு வளைகளையும் அணிகின்றனர். வெள்ளை ஆடையை முன்னாட்களில் பெண்கள் அணியக்கூடாது என்ற கட்டுப்பாடு இருந்