பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

218

பெண்ணை மணம் பேச முறை மாப்பிள்ளை (மாமன் மகன்) யாரும் வரக்கூடாது. அப்பெண்ணை அவளுடைய வீட்டின் வாயிலிலுள்ள ஒரு கம்பத்திற்குத் திருமணம் செய்து வைப்பார்கள். அவள் கழுத்தில் தாலி கட்டுவதற்குப் பதிலாக, அவளுடைய வலது கையில் வெள்ளியினாற் செய்த வளையல் ஒன்றை அணிவிப்பார்கள். அதன் பிறகு அப்பெண் அவள் குலத்தைச் சார்ந்த எந்த ஆடவனுடனும் தொடர்பு கொள்ளலாம். அவளுடைய வருமானம் பெற்றோரையே சேரும். அவளுக்கு ஆண் குழந்தை பிறந்தால், அக்குடும்பத்திற்குரிய சொத்து முழுவதும் அதையே சாரும், மேற்கு பெல்லாரியிலும், தர்வார், மைசூர் ஆகிய நாடுகளுக்கு அண்மையிலும் வாழும் பழங்குடி மக்கள் கடைப்பிடிக்கும் 'பசவிமுறை'யோடு இவ் வீட்டு வைப்பு முறை ஒத்துள்ளது.

மணவிலக்கு முறையும் இவர்களிடையே உண்டு. பரிசத் தொகையைத் திருப்பிக் கொடுத்துவிட்டால் உடனே மணவிலக்குப் பெறலாம். ஆனால் குழந்தைகள் எல்லாம் கணவனையே சாரும். கைம்பெண்களும், மணவிலக்குப் பெற்றவர்களும் மிக விரைவில் மறுமணம் செய்து கொள்ளுகின்றனர், ஆகையினால் மற்ற இனமக்கள் இப்பழக்கத்தை இழித்துப் பேசுகின்றனர்.

புலையர் :

பழனிமலையில் முதன் முதல் குடியேறியவர்கள் புலையர்களே. குன்னுவர் இம்மலையில் குடியேறுவதற்கு முன் இவர்கள் இங்கு உரிமை வாழ்வு வாழ்ந்து வந்தனர். இவர்கள் இனத்தால் தமிழர்களே. இவர்கள் கடைப்பிடித்து ஒழுகும் பழக்க வழக்கங்கள், சமவெளி யில் வாழும் மக்களின் பழக்க வழக்கங்களோடு பெரிதும் ஒத்திருக்கின்றன. இவர்கள் பேசும் மொழியும் தமிழே. இக்குலத்தாரின் தலைவன் நாட்டாண்மைக்