பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

228

உதகமண்டலத்திலிருப்பதைப் போன்றே கோடைக் கானலிலும் தட்ப வெப்ப நிலை உள்ளத்தைக் கவரும் தன்மையதாய் அமைந்துள்ளது. ஆனால் உதகையில் பெய்வதைவிட இங்கு மழை அதிகம். ஆண்டுக்கு ஏறக்குறைய 100 அங்குலம் மழை பொழிகிறது. உதகை தென்மேற்குப் பருவக் காற்றினால் ஜூன், ஜூலை, ஆகஸ்டுத் திங்கள்களில் மழையைப் பெறுகிறது. ஆனால் கோடைக்கானல் வட கிழக்குப் பருவக் காற்றினால் மழையைப் பெறுகிறது. மே, ஜூன் திங்கள்களில் பார்வையாளர்கள் (Visitors) இங்கு நிறையக் கூடுகின்றனர். அப்போது மழை பெய்து அவர்களுக்குத் தொல்லை கொடுப்பதில்லை. ஆனால் அதே சமயத்தில் உதகை சென்றால் நாள் தோறும் மழையினால் அவதிப்பட நேரிடும். கசிவும், வெப்ப நிலை வீழ்ச்சியும் உதகையிலிருப்பதைப் போல் அவ்வளவு அதிகமாக இங்கு இருப்பதில்லை. குளிர் காலத்தில்கூட இங்குக் குளிரின் கடுமை மிகவும் அதிகமில்லை என்றே சொல்லலாம். இங்குள்ள நிலம் மணலும் கல்லும் கலந்ததாக இருக்கிறது. அதனால் இங்குள்ள பாதைகளும், மட்டைப் பந்தாட்ட மைதானங்களும், மழை பெய்த சிறிது நேரத்தில் உலர்ந்து விடுகின்றன. கோடைக்கானலுக்கு மேற்கில் அடுத்தடுத்து அமைந்துள்ள செங்குத்தான மலைத் தொடர்கள், அவைகட்கப்பாலுள்ள அடர்ந்த காடுகளை மறைத்து நிற்கின்றன. இக் காடுகளுக்குள் எளிதாக யாரும் செல்ல முடியாது. இக் காடுகளிலும், கோடைக்கானலுக் கருகிலுள்ள காடுகளிலும் வரலாற்றுக் காலத்துக்கு முற்பட்ட கற் கருவிகளும், சமாதிகளும் கண்டறியப்பட்டுள்ளன. பெருமாள் சிகரத்திற்குத் தென்மேற்குப் பகுதியிலுள்ள காடுகளிலும் (வில்பட்டி செல்லும் பாதையில்) பாலமலையிலும் இவைகள் மிகுதியாகக் கிடைத்துள்ளன. கீழ்ப் பழனி மலையில் மச்சூர், பண்ணைக்காடு, தாண்டிக்குடி, காமனூர், பாச்சலூர் முதலிய இடங்களிலும் இவைகள்