பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

18

வற்புறுத்தி வருகின்றனர். இவ்வுண்மையை உணர்ந்து தான், நம் நாட்டின் உணவு மந்திரியாக இருந்த திருவாளர் முன்சி மரம் நடுவிழாவை (வனமகோத்சவம்) நாடெங்கும் துவக்கிவைத்தார்.

சேலம் மாவட்டத்திலுள்ள காடுகள் பலவிதங்களில் அழிக்கப்பட்டன. அதற்குக் காரணம் சென்ற நூற்றாண்டில் இங்கு இருப்புப்பாதைகள் அமைக்கப்பட்டதுதான். தண்டவாளங்களைப் பொருத்துவதற்கு வேண்டிய கிடை மரங்கள் (Sleepers) நிறையத் தேவைப்பட்டன. அம்மரங்களைப் பெறக் குத்தகைக்காரர்களை நாடினர் அரசாங்கத்தார். காடுகளிலுள்ள மரங்களை அவர்கள் விருப்பம்போல் வெட்டிக் கொள்ள ஒப்பமளித்தனர். இதைத் தகுந்த நல்வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்ட குத்தகைக்காரர்கள், காடுகளைத் தங்கள் பேராசைக்குப் பலியிட்டுக் கொள்ளை வருவாய் தேடிக்கொண்டனர். இருப்புப்பாதைக்குப் பயன் படுத்தப்படும் கிடைமரங்கள் ஒரே அளவினதாகவும், ஒழுங்கானதாகவும் இருக்கவேண்டும். வளைவோ, வலிவற்றதன்மையோ இருக்கக் கூடாது. அவ்வாறு கிடைமரங்கள், செய்வதற்கு அடிமரம்தான் பயன்படும். ஒரு கிடைமரத்திற்காக ஒரு முழுமரமே வீணாக்கப்பட்டது. 1859-60ஆம் ஆண்டில் மட்டும் இருப்புப்பாதை அமைப்பதற்காக வாங்கப்பட்ட கிடை மரங்களின் எண்ணிக்கை 2,45,743. அவைகளைக் காடுகளில் வெட்டிக் கொடுக்கக் குத்தகைக்காரர்களுக்கு உரிமை வழங்கியதற்காக விதிக்கப்பட்ட வரித் தொகை மட்டும் அவ்வாண்டில் ரூ. 23,500 சேர்ந்தது. இருப்புப்பாதை அமைக்கும் அவசரத் தேவையைப் பூர்த்தி செய்வதற்காகக் கணக்கற்ற மரங்கள் பொறுப்பின்றி மிக விரைவில் அழிக்கப்பட்டன. மலைமீதுள்ள காடுகளில் வாழ்ந்த மலையாளிகளும் பயிர்த்தொழில் செய்வதற்காகக் காடுகளை அழிக்கத் தொடங்கினர். அதனால் நிறைய