பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

239

கொள்ள முடியாத நிலையில் இருந்ததால், அரசியலாரின் உதவியை நாடவேண்டிய தாயிற்று.

ஃபிஷர் சீமாட்டியின் இருக்கை :

திருவாளர் ஃபிஷர் என்ற ஒரு வெள்ளையர் மதுரையில் அலுவலில் இருந்தார். செண்பகனூரில் அவருக்குச் சொந்தமான மாளிகை ஒன்றிருந்தது. அதில் தம் மனைவியை விட்டுவிட்டு மதுரைக்குச் சென்று விடுவார். ஓய்வு நாட்களில் செண்பகனூர் திரும்புவார். பழனி மலையின்மீது வரும் குதிரைப் பாதையின் உச்சியில் அமைந்துள்ள வளைவில், அழகிய சிறிய ஒரு கோடைமனை அமைத்தார். தனிமை வருத்தும் போது, ஃபிஷர் சீமாட்டி அவ்வளைவில் அமர்ந்துகொண்டு மதுரை நகர் அமைந்துள்ள திக்கைப் பார்த்த வண்ணம் இருப்பாராம், குறிப்பிட்ட நாட்களில் தம் கணவர் குதிரை ஊர்ந்து மலைவழிப் பாதையில் ஏறிவரும் காட்சியை அங்கிருந்து கண்டு களிப்பதுண்டாம். அதனால் அவ்விடம் இன்றும் ஃபிஷர் சீமாட்டியின் இருக்கை (Lady Fischer's seat) என்று எல்லோராலும் அழைக்கப் படுகிறது. 'வன போசனம்' உண்பதற்கு இது மிகவும் ஏற்ற இடமாக எல்லோராலும் இப்பொழுது கருதப்படுகிறது.

வானாய்வுக்கூடம் :

கோடைக்கானலில் அமைந்துள்ள வானாய்வுக் கூடம் சென்னை மாநிலத்திலேயே மிகவும் குறிப்பிடத் தக்க ஒன்றாகும். இது கோடைக்கானலுக்கு இரண்டு கல் தொலைவில், பூம்பாறைக்குச் செல்லும் பாதைக்கு அண்மையில் அமைந்துள்ள ஒரு சிகரத்தின்மேல் நிறுவப்பட்டுள்ளது. கி. பி. 1899-ஆம் ஆண்டு இந்திய நாட்டின் வான ஆராய்ச்சிக் கூடங்கள் திருத்தியமைக்கப்பட்டபொழுது, சென்னையிலிருந்த வானாய்வுக் கூடம் இங்கு மாற்றப்பட்டது. உதகமண்டலத்தி