பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

243

logy) பற்றியும் இது ஆராய்கிறது. அமெரிக்க ஐக்கிய நாட்டில் வில்சன்மலை (Mt. Wilson) மீது அமைந்துள்ள வானாய்வுக் கூடமும் ஃப்ரான்ஸ் நாட்டில் மியூடன் (Meudon) என்ற இடத்தில் அமைந்துள்ள வானாய்வுக்கூடமும் ஆற்றும் அத்தனை ஆராய்ச்சிகளையும் இது இங்கு ஆற்றுகிறது. மிகவும் புதுமையான வான ஆராய்ச்சிக் கருவிகளும், அனிலோற்பன்னக் கலையைப் பற்றி ஆராயும் கருவிகளும் இங்குப் பொருத்தப்பட்டுள்ளன. கி. பி. 1937-ஆம் ஆண்டு டாக்டர் ராய்ட் அலுவலிலிருந்து ஓய்வு பெற்றதும் டாக்டர் ஏ. எல். நாராயணன் இவ்வானாய்வுக் கூடத்தின் பொறுப்பை ஏற்றார்.

முதலிலேயே வான ஆய்வுக்கூடப் பொறுப்பாளரிடம் அனுமதி பெற்று, அங்கு அமைக்கப்பட்டுள்ள பெரிய தொலைநோக்காடி (Telescope)யின் மூலம் வான மண்டலத்தில் திரியும் கோள்களையும் விண்மீன்களையும் காணலாம். வான மண்டலத்தின் தன்மையை அறிந்து இன்படைவதற்காக ஒவ்வொரு வெள்ளிக்கிழமை காலையிலும் பொதுமக்கள் இவ்வானாய்வுக் கூடத்திற்குள் அனுமதிக்கப்படுகிறார்கள். இந்திய நாட்டுக் கால அளவைப் (Indian Standard Time) பொதுமக்களுக்கு உணர்த்துவதற்காக நாள்தோறும் காலை பத்து மணிக்கு ஒரு கொடி இவ்வானாய்வுக் கூடத்தில் உயர்த்தப்படுகிறது. வான ஆராய்ச்சியின் மூலமாகவும், உலகத்தின் மற்ற பகுதிகளில் அமைந்துள்ள வானாய்வுக் கூடங்களிலிருந்து வெளியாகும் ரேடியோ காலக் குறிப்புகளின் மூலமாகவும், இங்கு அமைந்துள்ள மணிப்பொறி சரியான கால அளவைக் காட்டி நிற்கிறது. பைன் மரங்களும், நீலப்பிசின் மரங்களும் கோடைக்கானலைச் சுற்றியுள்ள காடுகளில் உயர்ந்து வளர்ந்திருப்பதால் இங்கு ஏற்றப்படும் கொடி, எல்லா இடங்களுக்கும் தென்படுவதில்லை.