பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

250

களுக்குப் போதிய வசதியும் இல்லை. சாமான்கள் கொணர்ந்த பெட்டிகளே நாற்காலிகளாகப் பயன் படுத்தப்பட்டன. மாட்டு வண்டியில் பொருத்தப்பட்ட பீப்பாய்களின் மூலம் நெடுந்தொலைவிலிருந்து நீர் கொண்டுவரப்பட்டது. அப்போது போக்குவரவு வசதிகளும் மிகக் குறைவு. கி. பி. 1916-ஆம் ஆண்டு நடுநிலைப்பள்ளியாகத் துவங்கிய இது கி. பி. 1919-ஆம் ஆண்டு உயர் நிலைப்பள்ளியாக மாறியது. கி. பி. 1920- ஆம் ஆண்டு கோடைக்கானலுக்கு வந்த வெலிங்க்டன் சீமாட்டி, இப்பள்ளிக்கான இரட்டை மாடிக் கட்டிடம் ஒன்றுக்குக் கால்கோள் இட்டார். 1 லட்சம் ரூபாய் பொருட் செலவில் இக்கட்டிடம் கட்டப்பட்டது. 'கிண்டர் கார்டன்' வகுப்பிலிருந்து, சீனியர் கேம்பிரிட்ஜ் வகுப்பு வரை, இக்கட்டிடத்தில் நடைபெற்றன.

இப்பள்ளி நாளடைவில் நல்ல விளம்பரமும் முன்னேற்றமும் பெற்று ஒரு சிறந்த ஐரோப்பியப் பள்ளியாக மாறியுள்ளது. பத்து வயது முடியும்வரை, சிறுவர்களும் இங்கு மாணவர்களாகச் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர். பெண்கள் பள்ளியிறுதி வகுப்புவரை படிப்பதோடு, டிரினிடி கல்லூரி இசைத் தேர்வுக்கும் பயிற்சி பெறுகின்றனர். சேவியர் தாயார் ஓய்வு பெற்றதும், அகஸ்டின் தாயார் பள்ளித் தலைவராகப் பொறுப்பேற்றார். கி. பி. 1926-முதல் 1944 முடியப் பணியாற்றினார். அவருக்குப் பிறகு ஜோசஃபைன் தாயார், பள்ளித் தலைவராகப் பணியாற்றி வருகிறார். கோடை நாட்களில் இப்பள்ளியில் நடைபெறும் ஆண்டு விழா குறிப்பிடத்தக்கது. செயிண்ட் ஜான் சோதரியாலும், குமாரி எல்ஸ்பெர்க் என்பவராலும் இங்கு மாணவிகளுக்குச் சிறந்த கலைப் (Fine Arts) பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. ஆண்டு விழாக் காலங்களில் மாணவிகள் நிகழ்த்தும் ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் பாராட்டுதலுக்குரியவை,