பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

259

லாட்ஜில் துவக்கினர். இக் கழகத்திற்குச் சொந்தமாக ஒரு கட்டிடம் நிறுவ முடிவு செய்தனர். ஹைகிளெர்க் பள்ளிக்கருகிலுள்ள பியர் தோட்டத்தில் 'வின்ஸ்டன்' என்ற கட்டிடத்தை விலைக்கு வாங்கினர். பள்ளியின் அருகில் இக் கழகம் அமைக்கப்பட்டதால் மட்டைப் பந்தாட்டம் ஆட எல்லோருக்கும் வசதி ஏற்பட்டது. பிறகு புதிதாக ஓர் இடத்தையே விலைக்கு வாங்கி, இப் பொழுதுள்ள கழகக் கட்டிடத்திற்குக் கல் நாட்டு விழாவைச் செய்தனர். அக் கட்டிடத்திற்குக் கல் நாட்டியவர், கோடைக்கானலின் நீண்டகால வாசியான பேலிஸ் தாம்சன் என்ற அம்மையார். இக் கட்டிடத்தில் இப்போது அகன்ற ஒரு நடுமுற்றமும், நூல் நிலையமும், ஒரு சமயலறையும், ஆடவர் மகளிர்க்குரிய தனி அறைகளும், ஓய்வு பெறும் அறை ஒன்றும், செயற் குழு நடைபெறும் அறை ஒன்றும் அமைந்துள்ளன, அகன்ற நடுமுற்றம், வாரந்தோறும் புதன்கிழமையன்று தேநீர் விருந்து நடத்துவதற்கும், கூட்டங்கள், மாநாடுகள் நடத்துவதற்கும் பயன்படுகின்றது. இதில் 1200 உறுப்பினர்கள் உள்ளனர். கோடைக்காலங்களில் நானூறு பேர்களுக்குக் குறையாமல் இங்கு வருகின்றனர். இதில் பாதிரிமார்களல்லாத பொது மக்களும் நிறைய உள்ளனர்.

இக் கழகமானது ஆண்டுதோறும், பல குறிப்பிடத்தக்க பணிகளைப் புரிகிறது. சமூகவியல் பற்றிய மாநாடுகளோடு, மருத்துவம், கல்வி, தொழில் ஆகியவை சம்பந்தமான மாநாடுகளையும் இது நடத்தி வைக்கிறது. தென்னிந்தியாவிலுள்ள பிராடஸ்டண்டு கிருத்தவ சங்கங்கள் பலவற்றிற்கும் பாலமாக இருந்து இது இணைத்து வைக்கிறது, தென்னிந்தியாவின் பல பகுதிகளிலுமுள்ள கிருத்தவப் பாதிரிமார்கள் ஆண்டுக்கொருமுறை ஒன்று கூடுவதற்குரிய நல்வாய்ப்பையும் இது ஏற்படுத்துகிறது.