பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

261

மிகுதியாக இங்குக் குடியேறித் தங்களுக்கென மாளிகைகளை அமைக்கத் தொடங்கினர். டெல்லிப் பாராளு மன்றத்தின் மேல்சபை உறுப்பின (Member of council of states)ராகப் பணியாற்றியவர் டேவிட் தேவதாஸ் என்பவர். கி. பி. 1903-ஆம் ஆண்டு வானாய்வுக் கூடத்தின் எதிரில் 'ஒதுக்கம்' (Odookum) என்ற கட்டிடத்தைக் கட்டினார். இலங்கை அரசியலாரின் செயற்குழு (Executive council of the Ceylon Government) உறுப்பினராக இருந்த சர். பி. இராமநாதன் கிளென் வீழ்ச்சிக்கு அருகில் தம் மாளிகையைக் கட்டினார். இவ்வாறு இந்திய மக்களின் தொகை கோடைக்கானலில் பெருகியது.

கி. பி. 1915-ஆம் ஆண்டு இந்தியக் குடும்பங்களெல்லாம் ஒன்று சேர்ந்து தங்களுக்கென ஒரு தனிக் கழகத்தையும், ஒரு படகுக் கழகத்தையும் ஏற்படுத்தினர். இப்பணியை முன்னின்று நடத்தி வைத்தவர் சென்னையைச் சார்ந்த சர். டி. வி. சேஷகிரி ஐயர் என்பவர். அவருடைய உருவப்படம் இந்தியர் கழகக் கட்டிடத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறது. முதன் முதலில் கழகக் கட்டிடத்தில் ஒரு சிறிய அறைமட்டும் இருந்தது. கழகத்தோடு இணைந்த மட்டைப் பந்தாட்ட மைதானம் ஒன்றும் இருந்தது. சில ஆண்டுகளில் உறுப்பினர் தொகை உயர்ந்தது. கழகத்திற்குச் சொந்தமாக ஒரு நல்ல கட்டிடமும் கட்டப்பட்டது. திருவாளர் பாலசுப்பிரமணிய ஐயர் தற்போது செயலாளராக இருக்கிறார். இவர் கடந்த முப்பது ஆண்டுகளாக இந்தியர் கழகத்தின் உறுப்பினராக இருந்துவருகிறார். அவருடைய நண்பர்கள் அவரைக் 'கோடைக்கானலின் முதியோர்' என்று அழைக்கின்றனர். எஸ். சீனிவாச அய்யங்கார், சர். டி. விஜய ராகவாச்சாரியார், சர். ஏ. லட்சுமணசாமி முதலியார், கே. என். ஐயர், ஜனாப் அப்துல் காதர், ஜஸ்டிஸ் சந்