பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

269


6. குற்றாலம்

வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும்
மந்திசிந்து கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும்
கானவர்கள் விழியெறிந்து வானவரை யழைப்பார்
ககனசித்தர் வந்துவந்து காயசித்தி விளைப்பார்
தேனருவித் திரையெழும்பி வானின்வழி யொழுகும்
செங்கதிரோன் பரிக்காலும் தேர்க்காலும் வழுகும்
கூனலிளம் பிறைமுடித்த வேணியலங் காரர்
குற்றாலத் திரிகூட மலையெங்கள் மலையே.


திருக்குற்றாலக் குறவஞ்சி என்னும் தேனடையிலிருந்து சொட்டும் ஒரு துளி தேன் இப் பாடல். குறத்தி கூறும் மலை வளத்தின் சுவையான பகுதி. பாடலைப் படிக்கும் போதே நாவில் தேனருவித்திரை எழும்பி ஓடி வருகிறது. அம் மலையை நேரில் காணும் வாய்ப்பு ஏற்பட்டால் நம் உள்ளம் உவகைக் கடலாக மாறிவிடும் என்பதில் ஐயமுண்டோ ! குற்றால மலையின் பேரழகை நேரில் காணும் வாய்ப்பு நமக்கு இல்லையென்றே வைத்துக்கொள்வோம். அதனால் எவ்வித இழப்பும் இல்லை. இராசப்பக் கவிராயர் அம் மலையின் எழில் நலத்தைத் தம் கவிதை என்னும் கருவியால் படம் பிடித்து ஒவ்வொரு காட்சியாகக் காட்டிச் செல்லுகிறார். அவரைத் தொடர்ந்து செல்லுவோம்.

குற்றால மலையின் உச்சியிலிருந்து பல அருவிகள் இன்னிசை எழுப்பிக்கொண்டு இழிந்து வருகின்றன, வரும்போது முத்துக்களை கழற்சிக்காய்களாக வீசி விளையாடிக்கொண்டு ஓடி வருகின்றன. அருவிக் கரைகளில் பரவியிருக்கும் மணலில் சிறு வீடு கட்டி, கொஞ்சு மொழிக் கோதையர் செஞ்சொற் பேசி விளையாடு