பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

270

கின்றனர். அவ் வீடுகளைத் தம் திரைக் கைகளால் அழித்துக்கொண்டு ஓடுகின்றன அவ் வருவிகள். மலையில் வீழ்ந்த கிழங்கைத் தோண்டியெடுத்தும், தேனெடுத்தும் பொழுதைக் கழிக்கின்றனர் மக்கள். தினையை உரலிலிட்டு, கைவளை குலுங்க யானைக் கொம்பால் குற்றுகின்றனர் பெண்டிர். 'பிறகு தேனையும் தினைமாவையும் பிசைந்து வயிறார உண்டு, மனமார மலை வளம்பாடி ஆடுகின்றனர்.

அம் மலைமீது நிறைந்து வாழும் வானரக் கூட்டம் தேமாவின் தீங்கனிகளைப் பறித்தெடுத்துப் பந்தடித்து விளையாடுகின்றது. முகை விரிந்து தேன் துளிர்க்கும் சண்பக மலர்களின் நறுமணம் அருகிலுள்ள வானுலகம் சென்று வீசுகிறது. ஆடும் அரவு ஈனும் மாணிக்கங்கள் எங்கணும் பேரொளி வீசுகின்றன. வட்ட நிலா வானத்தில் எட்டிப் பார்க்கிறது. அதைச் சோற்றுக் கவளமென்று எண்ணிய யானை ஒன்று, ஓடிப்பற்ற முயல்கிறது. தினைவிதைப்பதற்காக வேடுவர்கள் மலைமீதுள்ள காடுகளைத் தீயிட்டு அழிக்கின்றனர், அத் தீயில் பட்டு எரியும் சந்தன மரங்களும், குங்கும மரங்களும் காடெங்கும் தங்கள் நறுமணத்தைப் பரப்புகின்றன. வரையாடுகள் எங்கும் குதித்து விளையாடுகின்றன. குற்றாலமலை மிகவும் உயர்ந்திருப்பதால், காகம் அம் மலையுச்சியையடைய முடிவதில்லை. உயர்த்து பெருமிதத்தோடு நிற்கும் அம் மலையுச்சிகளில் மேகக் கூட்டங்கள் படிகின்றன. வானத்தில் தோன்றும் இடி முழக்கம், முழவின் ஓசைபோல் அதிர்கிறது. அம் முழக்கத்திற்கேற்ப மயிலினங்கள் தோகை விரித்தாடுகின்றன. இயற்கையின் இருப்பிடமாய், எழில் வளத்தின் கொள்கலமாய் விளங்கும் இம் மலையைப் பற்றி, சைவ சமய குரவராகிய திருஞான சம்பந்தர் இனிமை சொட்டச் சொட்டப் பாடியிருக்கிறார். அப்பாட்டுப் பின் வருமாறு:-