பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/279

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

273

யை அடைகிறது. இது வேத அருவி எனப்படும். இதைக் கீழிருந்து பார்த்தால், அருவி விண்ணிலிருந்து குதித்து வருவது போன்று தோன்றும். இவ் வீழ்ச்சியின் நடு வழியிலுள்ள ஒரு பாறை அருவியைத் தடுக்கிறது. அப்பாறையில் நீர் விழுந்து விழுந்து மிக அழகான ஒரு பள்ளம் ஏற்பட்டுள்ளது. அதில் அருவி பாய்ந்து பொங்கி எழுவது, கடல் பொங்கி எழுவது போலத் தோன்றும். எனவே, இதற்குப் 'பொங்குமாங் கடல்' என்று மிகப் பொருத்தமாகப் பெயரிட்டிருக்கின்றனர். இப்பொங்குமாங் கடலிலிருந்து கீழே விழும் அருவியில் தான் மக்கள் குளிப்பர். குற்றால அருவி எனப்படும் இதில் குளித்தால், உடலில் ஒரு புத்துணர்ச்சி மலரும்; உடல் நலம் பெறும்.

குற்றாலத்தைவிடக் குளிர்ச்சியான மலைகள் பல உள. ஆயின், குற்றாலத்தைப்போல் மக்கள் நீராடுவதற் கென்று அமைந்த சீரான அழகுடைய அருவி வீழ்மலைப் பதி எதுவும் இல்லை, சிற்றாறு பல பகுதிகளாகப் பிரிந்து வீழ்ந்து அப்பகுதியையும் அருகிலிள்ள இடங்களையும் வளப்படுத்துகிறது. மலைமேல் பொழியும் பெரு மழையே இவ்வாற்றை உருக்கொள்ளுமாறு செய்கிறது. பிரிந்து விழும் இவ்வருவிகளுக்குப் பல பெயர்கள் வழங்குகின்றன. எல்லாவற்றிற்கும் உயரமாக விழும் அருவி தேனருவியாகும். அது மேலிருந்து விழும் இடத்தில் தேன் கூடு அதிகமாக இருப்பதால் இப்பெயர் பெற்றது போலும். இதற்குச் சற்றுக் கீழாக விழும் அருவி சண்பகதேவி அருவி என்று இப்பொழுது அழைக்கப்படுகிறது. இவ்வருவி விழும் இடத்தில் சண்பகதேவி என்ற அம்பிகை, கோவில் கொண்டிருக்கிறாள். இவ்விடத்தை முன்னர் சண்பக அடவி என்று முன்னோர் அழைத்தனர். முதலில் இவ்விடத்தில் சண்பக மரங்கள் நிறைய இருந்திருக்க வேண்டும். எல்லாவற்றிற்கும் கீழே தரையில் விழுவதை வட அருவி என்று அழைக்கின்றனர். இது வடதிசையில் அமைந்து

கு.வ.-18