பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

22

ஒரு சுவையான வரலாறுண்டு. கிழக்கிந்தியக் கம்பெனியாரின் ஆட்சி சேலம் மாவட்டத்தில் ஏற்பட்டதும், சந்தன மரத்தின் சிறப்பையும், உயர்வையும் ஆங்கிலேயர் உணர்ந்தனர். அவைகளைக்கூட விட்டு வைக்க அவர்களுக்கு மனமில்லை. கேப்டன் கிரகாம் (Captain Graham) என்பவன், காட்டில் வளர்ந்திருந்த எல்லாச் சந்தன மரங்களையும் வெட்டிக்கொள்ளும்படி ஒரு குத்தகைக்காரனுக்கு அனுமதியளித்து, அதற்கீடாக 300 பகோடா (Pagodas) க்களைப் பெற்றுக் கொண்டான். பகோடா என்பது பண்டைக்காலத்தில் நம் நாட்டில் வழங்கிய ஒரு தங்க நாணயம். அப்பேராசை பிடித்த குத்தகைக்காரன், சேலம் மாவட்டக் காடுகளிலிருந்த ஒரு சந்தனக் குச்சியைக்கூட விடல்லை. பத்தாண்டுகளுக்குச் சேலம் மாவட்டக் காடுகளில் சந்தன வாடையே இல்லாமல் செய்து விட்டான்.

இப்பொழுதெல்லாம் சந்தன மரங்கள் காட்டிலாகாவினராலேயே வெட்டப்படுகின்றன. காட்டுக் காவலன் ஒரு முதிர்ந்த சந்தன மரத்தைக் கண்டால், அது வெட்டுவதற்குத் தகுதியானதா? என்பதை முடிவு செய்வான். தகுதியானது என்று தெரிந்தால், அதன் உயரம், பருமன் முதலியவற்றை அளந்து காட்டிலாகா அதிகாரிக்குத் தெரியப்படுத்துவான். காட்டிலாகா அதிகாரி, அவ்வளவுகளைக் குறித்துக்கொண்டு, அம்மரத்தை வெட்டுவதற்கு ஆணையிடுவார். அதன் பிறகு அம்மரம் அடியோடு தோண்டப்பட்டு, பல துண்டுகளாக்கப்பட்டு, பட்டை செதுக்கப்பட்டுக் காட்டிலாகா அதிகாரின் மேற்பார்வைக்கு அனுப்பப்படும். அளவுகளெல்லாம் குறித்தபடி சரியாக இருக்கின்றனவா ? என்று தலைமை அதிகாரி சரி பார்ப்பார். இவ்வளவு முன்னெச்சரிக்கையோடு சந்தன மரங்கள் இப்போது வெட்டப்படுகின்றன.