பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/283

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

277

மேட்டு நிலத்தின் உச்சியில், இக் கோவிலுக்குச் சொந்தமான வேறொரு சிறு கோவிலும் அமைந்துள்ளது. இது சித்திர சபை என்று அழைக்கப்படுகிறது. அதில் ஆடவல்லான் (நடராசப் பெருமான்) அபிநயக் கோலத்தோடு காட்சியளிக்கிறான். அக் கோவிலின் சுவர்களில் வண்ண ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. இக் கோவிலின் எதிரில் ஒரு தெப்பக் குளம் உள்ளது. ஆண்டுதோறும் சனவரித் திங்களின்போது இக் குளத்தில் தெப்பத் திருவிழா (Foating Festival) நடைபெறும். ஆற்றின் இடதுபுறமாகக் கோவிலுக்கருகில் ஒரு பெரிய சத்திரம் அமைந்துள்ளது. இது கி. பி. 1700-இல், இந்துக்களுக்கும், இசுலாமியர்களுக்கும் உணவும் உறையுளும் வழங்குவதற்காகச் சொக்கம்பட்டிப் போளிகர்களால் கட்டப்பட்டது. இச் சத்திரம் இப்போது மாவட்டக் கழகத்தாரின் பொறுப்பில் உள்ளது. இச் சத்திரத்தை ஒட்டிப் பல அறைகளோடு கூடிய ஒரு கட்டிடம் இப்போது மாவட்டக் கழகத்தாரால் கட்டப்பட்டுள்ளது. அது பிரயாணிகளின் தங்கல் மனையாக இப்போது பயன்படுகிறது. பாதைக்கு எதிர்ப்புறத்தில் அமைந்துள்ள மண்டபம் 'வலங்கைப் புலி விலாஸ்' என்று அழைக்கப்படுகிறது. திருநெல்வேலி மாவட்டத் தண்டலர் குற்றாலத்தில் தங்கும்போது, இது அவருடைய அலுவலகமாகப் பயன்படுகிறது. இம் மண்டபம், புகழ் பெற்ற 'பெரியசாமி வலங்கைப் புலித் தேவ'னால் கட்டப்பட்டதாகும். பல நூற்றாண்டுகளாகத் திருக்குற்றாலம் ஒரு புண்ணியத் தலமாக மட்டும் தமிழ் மக்களால் கருதப்பட்டது. ஆனால் வெள்ளையர்கள் தமிழகத்தில் குடி புகுந்ததும், குற்றாலம் கோடை வாழ்விடமாக மாறி எல்லோரையும் தன்பால் ஈர்க்கத் தொடங்கியது.

குற்றால மலையின் பொருத்தமான தட்ப வெப்ப நிலையை அறிந்த ஐரோப்பியர், வெளி நாட்டுப் பயிர்களை இங்குக் கொணர்ந்து பயிரிடத் தொடங்கினர்.