பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/288

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

282

யுவர்களுக்கு இம்மாளிகை அமைந்துள்ள நிலம் உரிமையுடையதாக விளங்கியது. பாளையங்கோட்டையில் வணிகத்துறைத் தலைவராக விளங்கிய திருவாளர் ஜான்சல்லிவன் துரை, அந்நிலத்தை வாங்கி அழகிய இம்மாளிகையை எழுப்பினார். பிறகு திருநெல்வேலியின் துணைத் தண்டலராக விளங்கிய டபிள்யூ. ஓ. சேக்ஸ்பியர் என்பாரின் கைக்கு இது மாறியது. பிறகு திருவாளர் காக், சேக்ஸ்பியரிடமிருந்து இதை வாங்கித் தம் மகளுக்கு அளித்தார். அந்த அம்மையாரிடமிருந்து திருவாங்கூர் அரசர் இதை வாங்கினார். ஜி. ஏ. ஹக்ஸ் என்பாரால் கட்டப்பட்ட மாளிகை, 'கண்ணாடி பங்களா' என்ற பெயர்கொண்டு விளங்குகிறது. கண்ணாடி பதிப்பிக்கப் பெற்ற பலகணிகளையுடையதாக விளங்கியதால், புதுமை நோக்கி மக்கள் இவ்வாறு அழைத்தனர். பல மாறுதல்களுக்குப் பிறகும், இம் மாளிகை இப்பெயர் கொண்டே விளங்குகிறது. திருவாளர் ஹக்ஸ் தம் மகனான இராம்சிங்கிற்கு இம் மாளிகையைக் கொடுத்துவிட்டார். கொடுக்கும்போது "பாளையங்கோட்டையில் வாழும் இராணுவத்தலைவர்கள் எப்போது விரும்புகிறார்களோ, அப்போது இதில் தங்க அனுமதிக்க வேண்டும்" என்று கூறிக் கொடுத்தார்.

இப்பொழுது சில காலமாக ஐரோப்பியர்கள் இங்கு அதிகமாகத் தங்குவதில்லை. ஓரிரு ஐரோப்பியப் பாதிரிகளே இங்குக் குடியிருக்கின்றனர். மற்றவர்களெல்லாம், உதகமண்டலத்திற்கும் கோடைக்கானலுக்கும் சென்றுவிட்டனர். இப்போது தமிழ்நாட்டுச் செல்வர்கள் இங்குத் தங்குவதற்காகச் சிறிதும் பெரிதுமான பலமாளிகைகளை எழுப்பியுள்ளனர். அவைகள் பொதுவாக 'இந்தியன் வில்லாஸ்' என்று அழைக்கப்படுகின்றன. அவைகள் பெரும்பாலும் கோவிலுக்கருகிலும், நீர்வீழ்ச்சிக்கருகிலும் கட்டப்பட்டுள்ளன.