பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

26

படுத்திக் கொண்டால் இது ஒன்றும் நமக்குக் கடினமான செயல் அல்ல. சேலம் மாவட்டத்தின் இன்பப்பொழுது போக்குக்குரிய நிலைக்களங்களில் ஒன்றாக விளங்கும் ‘ஒகைனகல் நீர்வீழ்ச்சி’ யைச் செயல்படுத்தினால், சேலத்தில் அலுமினியத் தொழிற்சாலை செயலாற்றுவதற்கு வேண்டிய மின்னாற்றலை நிச்சயம் பெற முடியும். இந்திய அரசியலாரும் டேனிஷ்பேட்டை என்ற இடத்தில் ஒரு பாக்சைட் தொழிற்சாலை நிறுவத் திட்டமிட்டிருக்கின்றனர். ஏர்க்காட்டிலிருந்து நான்கு கல் தொலைவில் சேர்வராயன் சாமி கோயில் உள்ளது. அக்கோயிலுக்கு அண்மையில் இப்போது பாக்சைட் தோண்டி எடுக்கப்படுகிறது. சென்ற நூற்றாண்டில் திரு. டிக்கென்ஸ் (E. K. Dickense) என்ற ஒரு வெள்ளையர் ஏர்க்காட்டில் வாழ்ந்தார். அவர் ஒரு தோட்ட முதலாளி (Plantainer) முதன் முதலாக அவ்விடத்தில் பாக்சைட் கிடைப்பதை அவர் தாம் கண்டறிந்தார். அரசியலாரிடமிருந்து அவ்விடத்தைச் சுரங்கக் குத்தகைக்கு (mining leace) எடுத்துக் கொண்டு, அங்குக் கிடைக்கும் பாக்சைட்டைத் தோண்டி எடுக்கத் தொடங்கினார். இப்பொழுது அவ்விடம் வட இந்திய ஆலை முதலாளிகளில் ஒருவரான வி. எச். டால்மியாவிற்கு உரிமை பெற்று விளங்குகிறது. வெட்டி எடுக்கப்படும் பாக்சைட் தாது ஏர்க்காட்டிலுள்ள தொழிற்சாலைக்குக் கொண்டு வரப்படுகிறது. பெரிய உலையிலிட்டு வறுக்கப்பட்டு, மாபெரும் இரும்பு உலக்கைகளினால் பொடி செய்யப்படுகிறது. அவ்வாறு செய்யப்படும் பொடியை எம்ரி பொடி (Emry Powder) என்று அழைக்கின்றனர். அப்பொடி இந்தியா பூராவும் அனுப்பப்படுகிறது. இந்திய நாட்டில் எம்ரிபொடி செய்யும் தொழிற்சாலை இது ஒன்று தான். ஆண்டு ஒன்றுக்கு 10 லட்சம் ரூபாய் பெறுமான எம்ரி பொடி இங்கிருந்து அனுப்பப்படுகிறது. இத்தொழிற்சாலை கி. பி. 1942 ஆம் ஆண்டு நிறுவப்