பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

29

ஜெரேனியம் எண்ணெய் தேவைப்படுகிறது. இவ்வளவும் வெளி நாடுகளுலிருந்தே இறக்குமதி செய்யப்படுகின்றன. ஜெரேனியம் விளைவதற்கு ஏற்ற இடங்களைக் கண்டறிந்து இத்துறையில் அரசியலார் சிறிது ஊக்கம் காட்டினால், நம் நாட்டுக்கு வேண்டிய முழு அளவு ஜெரேனியம் எண்ணெயையும் நாமே தயார் செய்து கொள்ளலாம். சேர்வராயன் மலைமீது 200 ஏகர் நிலத்தை, இந்த ஆராய்ச்சிக்காகத் திரு. பவானி சிங்கிற்கு அரசியலார் வழங்கியுள்ளனர். இவருடைய தொழிற்சாலையில் ‘சேர்வராய் பிரமி கூந்தலெண்ணெய்’ என்ற ஒரு வாசனைத் தைலமும் உற்பத்தி செய்யப்படுகிறது. இது இந்திய நாட்டின் பல பகுதிகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

உயிரினங்கள் :

சேர்வராயன் மலைகளின் அடிவாரங்களிலுள்ள காடுகளில் ஒருவகை மானினம் (Sambur) காணப்படுகிறது. ஆனால் அதிக அளவில் இல்லை. மஞ்சவாடிக் கணவாய்க்குச் செல்லும் வழியில் கொம்பு தூக்கி, மாறன் மங்களம் முதலிய ஊர்களுக்கு அப்பால் கரடியும், அறுபதடி பாலத்திற்கருகில் உள்ள குடுமப்பட்டிக் காட்டில் சிறுத்தையும் இருப்பதாகக் கூறுகின்றனர். சேலம் மாவட்டக் காடுகளில் வழக்கமாகக் காணப்படும் நாகப் பாம்பு (Lachesis macrolecpis), கட்டுவிரியன் (Russells viper), பச்சைப் பாம்பு, (Green viper), குறுமலைப் பாம்பு (Young Python or Rock Snake) முதலியவை சேர்வராயன் மலைகளிலும் காணப்படுகின்றன.

தட்ப வெப்ப நிலை :

சேர்வராயன் மலையின் தட்ப வெப்பம் மிதமானது. 1906-ஆம் ஆண்டு, தட்ப வெப்ப நிலைக் கணக்கு எடுக்கப்பட்டது. ஏர்க்காட்டின் ‘கிரேஞ் ஹவுசின்’