பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/37

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
31

ஜூலையிலிருந்து காற்றின் வேகம் படிப்படியாகக் குறைந்து கொண்டு வந்து, அக்டோபரில் அமைதியாக இருக்கும். தொடர்ந்து வரும் மாதங்களில் காற்று மறுபடியும் புத்துயிர் பெறத் தொடங்கும். சேர்வராயன் மலைகளின் மீது ஆண்டுக்குச் சராசரி 41 அங்குல மழை பெய்கிறது.

குடியேற்றம் :

நீலகிரி மலை ஒரு கோடை வாழ் இடமாகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்பாகவே கி. பி. 1819-இல் சேலம் நகரில் வாழ்ந்த அதிகாரிகள், சேர்வராயன் மலையைத் தேர்ந்தெடுத்தனர். சேலம் மாவட்டத்தின் தண்டலராக இருந்த திருவாளர் காக்பர்ன் (Mr. Cockburn 1820-1829) என்பவர், சேர்வராயன் மலையில் முதன் முதலாகக் குடியேறினார். காஃபி, ஆப்பிள், பியர்ஸ், லாக்குவட்ஸ் முதலியவற்றைப் பயிரிட்டுச் சோதனை நடத்தினார். இப்போது ஏர்க்காட்டுக்கு அண்மையிலுள்ள கிரேஞ் தோட்டம் (Grange Estate) தான் அவருடைய சோதனைக் களமாக இருந்தது. கிரேஞ் ஹவுசில் இப்போது சரக்கறை (Store house) இருக்கும் இடத்தில்தான் சேர்வராயன் மலைமீது அமைக்கப்பட்ட முதல் கட்டடம் தோன்றியது. கி. பி. 1823-இல் சேலத்தில் அரசாங்க மருத்துவ (Civil Surgeon) ராக இருந்த ஒரு வெள்ளையரை சேர்வராயன் மலையின் இயற்கை அழகு வெகுவாகக் கவர்ந்தது. கோடையில் வாழ்வதற்கு ஏற்ற இடமாகச் சேர்வராயன் மலையைக் கருதினார். அதன் மீது ஒரு குறிஞ்சி நகரம் அமைப்பின் சேலம் மக்களுக்கு மிகவும் பயனுடையதாக இருக்கும் என்று எண்ணினார். அவ்வாண்டு சர் தாமஸ் மன்றோ (Sir Thomas Manro) என்பவர் சென்னை மாநில ஆளுந (Governor) ராக விளங்கினார். அவருடைய ஆணைப்படி அவ்வாண்டிலேயே திருவாளர் இங்கிலண்ட் என்பவர் சேர்வராயன் மலைகளை அளந்து