பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

32

ஆய்ந்தறிய வந்தார். சேலம் மாவட்டத் தலைமை மருத்துவர், சேர்வராயன் மலையின் மீது மல்லாபுரத்திலிருந்து ஒரு மலைப் பாதை (Ghat road) அமைப்பது அவசியம் என்பதை வலியுறுத்தி மேலதிகாரிகளுக்கு ஓரறிக்கை விடுத்தார். ஆனால் சேர்வராயன் மலைகளின் மீது பரவிய ஒரு கொடிய காய்ச்சலால் தாக்கப்பட்டு அவ்வாண்டிலேயே அவர் இறந்தார். ஆகையினால் சேர்வராயன் மலையின் முன்னேற்றம் சிறிது காலம் தடைப்பட்டது. வாழ்க்கையில் ஒரு மாற்றத்தையும் கேளிக்கையையும் விரும்பியவர்கள், அடிக்கடி மலை மேல் சென்று சில நாட்கள் தங்கி இன்பமார்ந்தனர்.

கி. பி. 1824-இல், இந்திய இராணுவத்தில் தளபதியாகப் பணியாற்றி வந்த வெல்ஷ் துரை மகனார் (Colonel Welsh) சேலம் மாவட்டத்தில் சுற்றுப் பயணம் செய்தார். அப்போது சேர்வராயன் மலைகளைப் பார்வையிடும் வாய்ப்பு அவருக்கு ஏற்பட்டது. திருவாளர் காக்பர்ன் தம் குடும்பத்தோடு மலைமீது தங்கியிருந்தார். அவர்களைக் கண்டு மகிழ்ந்த வெல்ஷ் பின்வருமாறு சேர்வராயன் மலைகளைப் பற்றிக் குறிப்பிடுகிறார்.

“சேலம், திருச்சி, தஞ்சை மாவட்டங்களில் வாழும் பணம் படைத்த செல்வர்களுக்கு இம்மலை சிறந்த வாழ்விடமாகவும், சிறந்த பொழுது போக்கிற்கு ஏற்ற இடமாகவும், உடல் நலத்தைப் பெருக்கி இன்பம் நல்கும் நிலைக்கலனாகவும் விளங்கியது. ஆனால் சில ஆண்டுகள் கழிந்ததும், இம்மலைகளில் ஒருவித நோய் பரவி அங்கு வாழ்ந்தவரை மிகுந்த கொடுமைக்குள்ளாக்கியது. அதனால் அவ்விடத்தைவிட்டு எல்லோரும் வெளியேறிவிட்டனர். அவர்களிடம் பணியாற்றிய வேலைக்காரர்கள் அக்கொடுமையை ஏற்று அங்கேயே தங்க வேண்டியவரானார்கள். அவர்களெல்லாம் அம்மலை வாழ் மக்களான ‘மலையாளிகள்’. அம்