பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

37

அழகிய கோயில்கள் உள்ளன. இக் கோயில்களுக்குச் சற்று மேற்கே, வாரச் சந்தை கூடும் இடமுள்ளது.


சீமாட்டி இருக்கை :

ஏர்க்காடு உந்து வண்டி நிலையத்திலிருந்து சீமாட்டி இருக்கையை அடைய ஒரு கல் தொலைவு செல்ல வேண்டும். கடல் மட்டத்திலிருந்து இவ்விடம் 4500 அடி உயரத்தில் அமைந்துள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு ஏர்க்காட்டில் வாழ்ந்த ஓர் ஐரோப்பிய மாது, இவ்வழகிய இடத்திற்கு நாள்தோறும் சென்று அமர்ந்து படித்துக் கொண்டிருப்பாராம். ஆகையினாலேயே இவ்விடம் ‘சீமாட்டி இருக்கை’ (Lady Seat) என்று அழைக்கப்படுகிறது என்று அவ்வூர் வாழ் மக்கள் கூறுகின்றனர். இவ்விடத்தில் அமர்ந்து நோக்குவார்க்குச் செங்குத்தான மலைச் சரிவும், சமவெளிகளும் தோன்றா நிற்கும். மேட்டூர் அணை தன் பரந்த நீர்ப் பரப்போடு நம் கண்களில் படும். நெளிந்து செல்லும் மலைப் பாம்பு போல் மலை வழிப் பாதை தோன்றும். அப் பாதையில் மேலும் கீழுமாக ஊர்ந்து வரும் உந்து வண்டிகள் நம்மை இன்பத்தில் ஆழ்த்தும். சுண்ணாம்புக் கரட்டில் அமைக்கப்பட்டிருக்கும் பேருலைகளிலிருந்து எழும்புகை வான மண்டலத்தை இருட்டாக்கும் காட்சியைக் காணலாம். இரவு நேரங்களில் சேலத்தைக் காண்போமானால், இலட்சக் கணக்கான வண்ண விளக்குகளின் நடுவில் அந்நகரம் அமைந்து ஒளியுடன் விளங்கும் காட்சி கண் கொள்ளாக் காட்சியாகும்; வானத்து விண்மீன்களையெல்லாம் பிடித்து மண்ணில் பதித்து வைத்தாற் போன்று தோன்றும்.


பகோடா உச்சி :

ஏர்க்காடு அமைந்துள்ள இடம் இயற்கை அழகுமிக்கது என்று கூறிவிட முடியாது. அதைவிட்டு ஓரிரண்டு மைல் நடந்து சென்றாேமானால் சேர்வராயன்