பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/44

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
38

மலையின் இயற்கை நலம் கொழிக்கும் பல காட்சிகளைக் கண்டு மகிழலாம். தமிழகத்தின் பல பகுதிகள் நம் கண்ணில் படும். ஏர்க்காட்டின் வட கிழக்கில் பகோடா உச்சி (Pagoda Point) என்ற இடம் உள்ளது. இது 4507 அடி உயரமுள்ளது. இங்குள்ள மலைக் கோயில்கள் பர்மியர்களின் பகோடா (கோயில்)க்களைப் போல் விளங்குகின்றன. பகோடாக்கள் அடியில் அகன்றும் மேலே செல்லச் செல்லக் குறுகியும் இருக்கும். எனவே இவ்விடம் பகோடா உச்சி என்று அழைக்கப்படுகிறது. இங்கிருந்து காண்போருக்கு, கிழக்கில் இருக்கும் தேனாந்தி மலைகளும், கல்ராயன் மலைகளும், சேலம் ஆத்தூர் சமவெளிகளும், பரந்து கிடக்கும் கொல்லிமலை, பச்சைமலை, போதமலை, ஜெருகுமலைத் தொடர்களும் தோன்றும். பகோடா உச்சிக்கு எதிரில் மிகவும் அழகான பெரும்பாறை ஒன்று உள்ளது. அப் பாறையிலிருந்து சில நூறு அடிகளின் கீழ் தேன்கூடு போன்று அழகுடன் காட்சியளிக்கும் காகம்பாடி என்னும் சிற்றூர் உள்ளது.


கரடிமலையும் பிராஸ்பெக்ட் உச்சியும் :

கரடிமலை என்னும் சிகரம் 4828 அடி உயரமுள்ளது. பிராஸ்பெக்ட் உச்சி 4759 அடி உயரமுள்ளது. இவ்விரண்டிடங்களினின்றும் காண்போருக்குத் திருச்செங்கோட்டுச் சமவெளியும், ஓமலூர்க் கோட்டமும், அவைகட்குப் பின்னால் கோவை மாவட்டத்தில் பரவியிருக்கும் பில்லி மலைகள், பருகூர் மலைகள், கம்பட்டராயன் மலைகள், பாலமலை, லாம்ப்டன் சிகரம் முதலியனவும், மைசூர் நாட்டிலுள்ள குட்டிராயன் மலையும் நன்கு தெரியும். வானத்தில் மூட்டமில்லாமல் தெளிவாக இருக்கும் நாட்களில் ஆனை மலைகளும், நீலகிரி மலைகளும், (Nilgiries) பழனிமலைகளும் நன்கு தெரியும்.