பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/51

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
45

நாட்டிற்கு வந்தது பற்றி ஒரு சுவையான வரலாறு கூறப்படுகிறது. கி. பி. 1600 இல் பாபாபூதான் சாகிப் என்ற ஓர் இஸ்லாமிய மன்னர், மைசூர் நாட்டிலுள்ள சந்திரகிரி மலைமீது வாழ்ந்த ஒரு குறுநில மன்னனைத் தோற்கடித்து விட்டுத் தன் வீரர்களைப் பார்த்து, “நண்பர்களே ! நான் மெக்காவிற்கு ஒரு புனித யாத்திரை செல்லப் போகிறேன். நான் வரும் வரையில் காத்திருங்கள்” என்று கூறிவிட்டு ஒரு குகையில் நுழைந்து மறைந்தார். அவ் வீரர்களும் பல திங்கள்கள் அவர் வருகைக்காகக் குகையின் வாயிலில் காத்திருந்தனர். சாகிபும் பல திங்கள்களுக்குப்பின் திரும்பி வந்தார். வந்தவுடன் தன் வீரர்களை நோக்கி, “நான் மெக்காவாகிய புண்ணிய பூமியிலிருந்து உங்களுக்குப் பரிசாக ஏழு விதைகள் கொண்டு வந்திருக்கிறேன். அவற்றிலிருந்து ஓர் அதிசயமான பயிர் விளையப் போகிறது. அது நமக்கு உணவாகவும், சுவை நீராகவும் பயன்படும்” என்று கூறி அரேபியாவிலிருந்து கொண்டு வந்த அக்கொட்டைகளைக் கொடுத்தார். அக் கொட்டைகளை அம் மலைமீது பயிரிட்டனர். அரேபியாவிலிருந்து கொண்டு வரப்பட்ட காஃபிக் கொட்டை அரேபிகா என்று பெயர் பெற்றது என்பர். பிறகு அம் மன்னரும் ஒரு குடிசை அமைத்து அம் மலையின்மீதே வாழ்ந்தாராம். அதிலிருந்து அம் மலை பாபாபூதான் மலை என்று அழைக்கப்படுகிறது. இக் கதை நம்பத் தகுந்ததாக இல்லை. இருந்தாலும் காஃபி விதைகளை இந்தியாவிற்குக் கொணர்ந்தவர் பாபாபூதான் சாகிபுதான் என்று கூறுகின்றனர்.

உலகத்திலேயே காஃபிப் பயிர் விளைவுக்கென்று ஒரு சில மலைகளே உள்ளன. அப் பயிர் விளைவதற்கு ஏற்ற நிலம் சூரிய ஒளி பரவும் உயர்ந்த மலைச் சரிவே ; ஆனால் நிழலுள்ள இடமாகவும் இருக்க வேண்டும் ; நிறைய மழையும் பெய்ய வேண்டும். மழை