பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/52

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
46

நீர் தேங்கக் கூடாது. தழை உரம் நிறைந்த வளமான காட்டு நிலமாகவும் இருக்க வேண்டும். அத்தகைய குறிஞ்சி நிலங்கள் தென்னிந்தியாவில் நிறைய இருக்கின்றன. மைசூரிலுள்ள பாபாபூதான் மலைகளும், சென்னை மாநிலத்திலுள்ள நீலகிரி, வயநாடு (Wynaad), சேர்வராயன் மலைகளும், ஆனைமலை, பழனி மலை முதலியனவும், குடகு மலைகளும், மைசூர், சென்னை மாநிலங்களில் பரவிக் கிடக்கும் பில்லிகிரி மலைகளும், கேரளத்திலுள்ள நெல்லியம்பதி, கண்ணன் தேவன் மலைகளும் குறிப்பிடத்தக்கவை. அஸ்ஸாம், ஒரிசா, மத்தியப் பிரதேசம் முதலிய வட இந்திய மாநிலங்களிலும், அந்தமான் தீவுகளிலும் இப் பயிர் குறைந்த அளவில் விளைகிறது.

சேர்வராயன் மலைகளில் முதன் முதலாகக் காஃபிப் பயிர்த் தொழிலைத் தொடங்கியவர் ஜி. பிஷர் (Mr. G. Fischer) என்ற வெள்ளையரே. சேலம் மாவட்டத் தண்டலராக விளங்கிய எம். டி காக்பர்ன் என்பாரின் ஒப்புதல் பெற்று, இப்பயிர்த்தொழிலைத் துவக்கினார். இப்புதுத் தொழிலுக்கு ஆக்கமளிக்க விரும்பிய அரசியலார், இவருக்கு நிறைய நிலங்களை அளித்தனர். அதன் பிறகு பலர் இப்பயிர்த் தொழிலை வளர்க்க இங்குக் குடியேறினர். ஓரளவு சிறந்த முறையில் இத்தொழில் வளர்ச்சியுற்றது. ஆனால் திடீரென்று காஃபி விலையில் ஏற்பட்ட சரிவும், இப்பயிர்த் தொழில் செய்வதற்கு ஏற்பட்ட முட்டு வழிச் செலவின் உயர்வும், விளைவால் வீறு குன்றிய நிலங்களுக்கு நிறைந்த உரமிட வேண்டிய இன்றியமையாமையினால் ஏற்பட்ட செலவும், தோட்டக்காரர்களை வறுமையில் ஆழ்த்தி விட்டன. போதாக் குறைக்குப் புதிய புதிய நோய்கள் தோன்றிப் பயிர்களைப் பாழடித்தன. செய்வதறியாது கலங்கிய தோட்டக்காரர்கள் சிறிது நாள் இத்தொழிலைக் கைவிட்டனர். பிறகு பல வழிகளில் ஆராய்ந்து சிந்தித்து, சாகுபாடியில் புதிய முறைகளைப் புகுத்தினர்.