பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

54

உயரமுள்ளது. வடமேற்குப் பீடபூமியின் உச்சி 400 அடி தாழ்ந்தது. வடக்கிலுள்ள பள்ளத்தாக்குகளைப் பிரிக்கும் மலைத்தொடர் 3000 அடி உயரமுள்ளது. ஆத்தூர் வட்டத்துக் கொல்லி மலையிலுள்ள மிக உயர்ந்த சிகரம் வேடக்கார மலையாகும். அதன் உயரம் 4,663 அடி.


ஆறுகள் :

சேர்வராயன் மலைத்தொடரில் தோன்றும் ஆறுகள் பல. ஆனால் கொல்லி மலையில் ஆறுகள் அதிகமில்லை. சுவேத நதி, வசிட்ட நதி என்ற சிற்றாறுகள் கொல்லி மலை, பச்சை மலை, கல்ராயன் மலைகளில் பெய்யும் மழை நீரினின்றும் தோன்றுகின்றன. சுவேத நதி என்ற பெயர் வட சொற்களாலானது. அதைத் தமிழாக்கும் போது ‘வெள்ளாறு’ என்று அமையும். ஆனால் சுவேத நதி, வசிட்ட நதி ஆகிய இரண்டையும் வெள்ளாறு என்றே எல்லோரும் அழைக்கின்றனர். ஆனால் புது வெள்ளக் காலங்களில், இம் மாவட்டத்திலுள்ள மற்ற ஆறுகளைவிட மிகவும் செந்நிறமான நீரை, இவைகள் கொண்டு விளங்குகின்றன. வெள்ளாறு என்ற பெயர் இவைகட்குப் பொருந்தாத ஒன்று என்று தான் கூற வேண்டும். சுவேத நதி என்ற பெயருக்குக் காரணமாக ஒரு கதை வழங்குகிறது. பஞ்ச பாண்டவரில் ஒருவனான அருச்சுனன் தென்னாட்டிற்கு யாத்திரை வந்திருந்தபோது கொல்லி மலையை அடைந்தானாம். சுவேத நதி தோன்றுமிடத்தில் ஒரு பூசை நடத்த விரும்பினான். ஆனால் பூசைக்கு வேண்டிய நீரில்லை. தன் காண்டீபத்தில் கணை தொடுத்துப் பாறைமீது எய்தான். உடனே அவ்விடத்தில் ஒரு பிளவு ஏற்பட்டு அதனின்றும் நீர் பெருகி ஆறாக ஓடத் தொடங்கியது. அருச்சுனனுக்குச் ‘சுவேத வாகனன்’ என்ற ஒரு பெயரும் உண்டு. சுவேதவாகனனால் கொணரப் பட்ட நதி சுவேத நதியாயிற்று.