பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

55


வசிட்ட நதி, வசிட்ட முனிவரின் பெயரால் ஏற்பட்டது. அவர் இந் நதிக் கரையில் பேளூருக்கருகில் ஒரு வேள்வி செய்தார் எனக் கூறப்படுகிறது. அவ்வூருக்கு வடக்கில் வெண்மையான பாறையொன்று உள்ளது. வசிட்டர் செய்த வேள்வியால் விளைந்த சாம்பலே அவ் வெண்மையான பாறையாக மாறிவிட்டதென்று கூறுகின்றனர். வசிட்ட நதிக்கும் பேராறு என்ற வேறு பெயரும் உண்டு.


காடுகள் :

கொல்லி மலையின் மீதுள்ள காடுகள் வளமானவை. இம் மலையிலிருந்து இழிந்து வரும் சிற்றாறுகளின் கரைகளில் மிகவும் அடர்த்தியான, பசுமை மாறாத இள மரக் காடுகள் நிறைந்துள்ளன. சேலம் மாவட்டக் காடுகளில் கிடைக்கக் கூடிய முக்கியமான மலைபடு பொருள் மூங்கில். இம் மூங்கில்கள் வெட்டப் பட்டு ஈரோடு, கரூர், சென்னை முதலிய நகரங்களுக்கு நிறைந்த அளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

மூங்கிலைக் கொண்டு உறுதியான தட்டி (படல்) கள் செய்கின்றனர். மூங்கிலின் வெளிப்புறத்தில் பசுமையாகவும் உறுதியாகவும் உள்ள பாகம் தனியாகப் பிரித்தெடுக்கப்பட்டு இத் தட்டிகள் செய்யப்படுகின்றன. வீட்டு மறைப்புகளுக்கு இது பெரிதும் பயன்படுகிறது. மேலும் மூங்கிலால் பெரிய பாய்கள் செய்யப்படுகின்றன. இவைகள் விரிப்புகளாகவும், பந்தல்களாகவும் பயன்படும். காஃபி நாற்று (Seedling)களுக்காக 3 அங்குலக் குறுக்களவும், 9 அங்குல உயரமுமுள்ள சிறு கூடைகள் நிறையச் செய்யப்படுகின்றன. இவை ஆயிரம், 50 ரூபாய்க்கு விற்கப்படுகின்றன. மாம்பழம், ஆரஞ்சுப் பழம், மீன், ரொட்டி முதலியவற்றைச் சேதமில்லாமல் அனுப்ப மூங்கிற் கூடைகள் பெரிய அளவில் நிறையத் தேவைப்படுகின்றன. வயலுக்கு நீர் இறைக்