பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

56

கும் இறை கூடைகள், கோழிக் கூடைகள், பறவைக் கூடுகள், விசிறிகள் முதலியனவும் மூங்கிலிலிருந்து செய்யப்படுகின்றன. ஆயிரக்கணக்கான மக்கள் இத் தொழிலால் வாழ்கின்றனர்.

சந்தன மரங்கள் இங்கு நிறைய உண்டு. இம்மலையில் கிடைக்கும் தழைகளைச் சேகரித்து, திருச்சி மாவட்டத்திலுள்ள நஞ்சை நிலங்களுக்கு உரமாகப் பயன்படுத்துகின்றனர். கொல்லி மலைத் தேன், இலக்கியப் புகழ் பெற்றது. கொல்லித் தலைவன் ஒருவனைப் பாராட்டப் புகுந்த ஒரு புலவர், அம் மலைபடு தேனின் சிறப்புக்கு முதலிட்ம் கொடுத்து, “கொல்லி மலைத் தேன் சொரியும் கொற்றவா!” என்று விளக்கினார்.


விலங்குகள் :

தமிழ் நாட்டு மலைகளில் பொதுவாகக் காணப்படும் கரடி (Sloth bear) கொல்லி மலையிலும் நிறையக் காணப்படுகிறது. ஆனால் அங்கு வாழும் மலையாளிகள் அவற்றைக் கொல்வதில்லை. காரணம், இராமபிரானின் இலங்கைப் படையெடுப்பின்போது உற்ற நண்பனாக உடனிருந்து உதவிய ஜாம்பவானின் வழி வந்தவைகள் என்று கருதிக் கரடிகளை வணங்குகின்றனர். கொல்லி மலையின் அடிவாரங்களில் கருத்த வரையாடுகள் கூட்டங்கூட்டமாகத் திரியும். அவை அச்சம் மிக்கவை. யாராவது அச்சுறுத்திவிட்டால், நான்கைந்து கல் தொலைவு ஓடிய பிறகுதான் அவை நிற்கும். காட்டுப் பன்றிகளும் இங்கு நிறைய உண்டு. அவற்றின் இறைச்சியை மலையாளிகள் விரும்பி உண்பர். இதுவும் திருமாலின் அவதாரம்தான் ! எல்லாவற்றையும் இறைவனின் அவதாரம் என்று ஒதுக்கி விட்டால் காட்டில் வாழும் மலையாளிகள் பாவம், எதைத்தான் உண்பர்...... !