பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

59

நில நஞ்சைகள், உழவுத் தொல்லையின் காரணமாக ஆண்டுக்கு ஒரு போகமே விளையும். ஒரு போகமே விளைந்தாலும் முன்கூறிய நஞ்சை நிலங்களைவிட இது இருமடங்கு அதிகமாக விளைச்சலைக் கொடுக்கும்.


வாழை :

கொல்லி மலையில் பயில் நாட்டிற்கு மேற்கில் உள்ள சரிவுகள் அருவியின் நீர்வளத்தால் செழிப்புடன் விளங்குகின்றன. அவ்வளத்தை நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டு நிறைய வாழை மரங்களைப் பயிர்செய்கின்றனர். அங்கு அதிகமாக விளையக் கூடியது ‘இரஸ்தாலி’ வாழை. கொல்லி மலையில் மிகவும் உயர்ந்த ரகப் பழமான ‘கருவாழை’யும் நிறைய விளைகின்றது. இது மிகச் சுவையானது. ஆனால் விலை அதிகம். ‘பட்டு வாழை’ என்று சொல்லக் கூடிய மற்றாெரு வகை வாழையும் இங்குப் பயிர் செய்யப்படுகிறது. இது நீளமாகவும் செந்நிறமாகவும் இருக்கும்.


இராகி :

கொல்லிமலையில் விளையும் முக்கியப் பயிர்களில் இராகியும் ஒன்று. மே அல்லது ஜூன் திங்கள்களில் நிலங்கள் உழப்பட்டு, இராகி விதைக்கப்படுகிறது. நான்கு ஐந்து திங்கள்கள் கழித்து, இது அறுவடை செய்யப்படுகிறது. அறுக்கும்போது ஒரு கோழிச் சேவலையோ, ஆட்டையோ பலியிட்டு அதன் குருதியில் வெண்சோற்றைக் கலந்து வயல்களில் இறைப்பர். பிறகு கதிர்களை அறுத்துச் சில நாட்கள் வெயிலில் உலர்த்தி மாடுகளால் மிதிக்கச் செய்து, மணிகளைத் தனியே பிரித்தெடுப்பர். கதிர் அறுத்துப் பத்து நாட்கள் கழிந்ததும் அதன் தாளை அறுக்காமல் தீயிட்டு எரித்து விடுவர்.