பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

61

பட்ட எரிபொருளின் (கரி) விலை அளவுக்கு மீறி உயர்ந்ததாலும், வெளிநாடுகளிலிருந்து இங்கு இறக்குமதி செய்யப்பட்ட இரும்பு மிகவும் மலிவாகக் கிடைத்ததாலும், இத் தொழிலானது சேலம் மாவட்டத்தில் சிறுகச் சிறுக அழிந்து விட்டது.

சேலம் மாவட்டத்தில் இரும்பைத் தாதுவிலிருந்து பிரித்தெடுக்கப் பயன்படுத்தப்பட்ட உலை களிமண்ணால் செய்யப்பட்டது. ஒரு கண்ணாடிப் புட்டியைப்போல் தோற்றமளிக்கும் அவ்வுலை, 4 அடி உயரமும், அடித்தளத்தில் 2 அடி குறுக்களவும், உச்சியில் 9 அங்குலக் குறுக்களவும் கொண்டதாகும். அவ்வுலையின் அடித்தளம் பூமியின் மட்டத்திலிருந்து 1/2 அடி தாழ்ந்திருக்கும். அத்தளத்தில் 10 அங்குல சதுரமான ஒருவழி இருக்கும். அவ்வுலையில் பாதிப்பகுதியைக் கரியால் நிரப்பி, அதற்கு மேல் இரும்புத் தாதைக் கொட்டுவர். ஆட்டுத் தோலால் செய்த துருத்தியொன்றை அவ்வுலையில் பொருத்தியிருப்பர். அத்துருத்தியை அமுக்கிக் காற்றை உலையினுள் செலுத்துவர். உலையின் மற்ற வழிகளெல்லாம் பச்சைக் களிமண்ணால் மூடப்படும். இவ்வாறு 3 1/2 மணி நேரம் உலைக்காற்றை ஊதிக் கொண்டிருந்தால் 12 ராத்தல் எடையுள்ள இரும்பு வெளிப்படும். இது தான் பண்டைய முறை.

ஜெ. எம். ஹீத் (J. M. Heath) என்ற ஓர் ஆங்கிலேயர், கிழக்கிந்தியக் கம்பெனியின் வணிகத்துறைப் பொறுப்பாளராகச் சேலத்தில் இருந்தார். சேலம் மாவட்டத்தில் புதைந்து கிடக்கும் இரும்புத்தாதுவின் வளத்தை அறிந்த அவர் கி. பி. 1825 ஆம் ஆண்டு கம்பெனியின் அலுவலிலிருந்து விலகி, இரும்புத் தாதை எடுத்து ஆக்க வேலைக்குப் பயன்படுத்தும் துறையில் கல்விபயில இங்கிலாந்து சென்றார். 1830 இல் இந்தியாவிற்குத் திரும்பி, தென் ஆற்காடு மாவட்டத்தில் ‘போர்ட்டோ நோவா இரும்புத் தொழிற்