பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

64

தொழில் வளத்திற்குக் காணிக்கையாக்கும். சேரன் ஆண்ட சே(ர)லத்தில் ஜெம் ஷெட்பூர் உருவாகும்.


வரலாறு:

கொல்லி மலையைப் பற்றிய தொன்மையான வரலாறு கி. பி. முதல் நூற்றாண்டைச் சார்ந்ததாகும். அந் நூற்றாண்டில் தமிழகத்தில் வெற்றிக் கொடி கட்டியாண்ட மாவீரன், சேரன் செங்குட்டுவன் என்பதைச் சங்க மருவிய நூல்கள் பறை சாற்றும். கங்கைப் பேரியாறும் இமயப் பெருமலையும் அவன் வெற்றிச் சிறப்பை இன்றும் எதிரொலித்துக் கொண்டிருக்கின்றன. பேரியாறு மேலைக் கடலில் விழும் இடத்தில் சேரநாட்டின் தலைநகரம் அமைந்திருந்தது. அவ்வஞ்சி நகரில் வீற்றிருந்து எஞ்சியிருந்த நாவலந் தீவை ஆட்சி புரிந்தனர் சேரர். கொங்குநாடும் அதன் வளமிக்க குறிஞ்சியான கொல்லியும் அவர்கள் ஆணைக்குட்பட்டிருந்தன. சேர மன்னர்கள் இளமையிலேயே தங்கள் இளங்கோக்களை அரசியலில் பயிற்றும் வழக்க முடையவர்கள். இளவரசன் மாந்தரஞ் சேரலிரும்பொறை, கொங்கு நாட்டின் கோமானாக அனுப்பப்பட்டான். இவன் செங்கோலையுடையவன், யானையினது பார்வை போலும் நோக்குடையவன். ‘விளங்கில்’ என்னும் ஊரார்க்குப் பகைவரான் வந்த துன்பத்தைத் தீர்த்தோன்; கபிலருடைய நண்பன்; ஒரு காலத்துப் பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனால் கட்டப்பட்டுப் பின்பு அதனை நீக்கிக் கொண்டு புகழ் பெற்றாேன்; சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளியோடு போர் செய்தோன்; இவன் பெயர் ‘யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை’ எனவும், சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை’ எனவும் வழங்கும். எட்டுத்தொகையுள் ஒன்றாகிய ஐங்குறு நூற்றைத் தொகுப்பித்தோன் இவனே. குறுங்கோழியூர் கிழார், பொருந்தில் இளங்