பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

67

ஓரி” (புறநா. 158), “ஓரி, பல்பழப் பலவின் பயங்கெழு கொல்லி” (அகநா. 208) என்ற தொடர்களால் விளங்கும். கொல்லிவாழ் மக்கள், ஓரி வாழ்ந்த இடமாக ஒரு மண்மேட்டைச் சுட்டிக் காட்டி இன்றும் பெருமைப்படுகின்றனர்.

மலையமான் திருமுடிக்காரியும், ஓரியும் சமகாலத்தவர். திருமுடிக்காரி பெண்ணையாற்றங்கரையின் கண் உள்ள ‘மலாடு’ என்று வழங்கும் மலையமானாட்டின் அரசன். கோவலூர் இவனது தலைநகர். கடையேழு வள்ளல்களில் இவனும் ஒருவன். முள்ளூர் மலையையுடையான். இவன் குதிரைக்குக் காரி என்று பெயர். காரிக் குதிரையூர்ந்து திரிந்ததால் இவனும் காரி எனப்பட்டான் போலும். இவன் குறுநில மன்னனாக இருந்தாலும் ஆற்றலும், பயிற்சியும் மிக்க சிறந்த படைக்கு உரிமையுடையவனாக இருந்தான். போர் ஏற்படும் போது பேரரசர்களெல்லாம் இவன் துணையை நாடினர். காரியும் ஓரியும் பகைவர்களாக இருந்து போரிட்டனர் என்ற செய்தி, “காரிக்குதிரைக் காரியொடு மலைந்த, வோரிக் குதிரை ஓரியும்” (சிறுபாண் 110-111) என்ற அடிகளால் புலப்படும். மேலும் சேரனும் ஓரியும் மாறுகொண்ட பொழுது, காரி சேரர் பக்கம் நின்று போரிட்டு ஓரியைக் கொன்று கொல்லி மலையைச் சேரனுக்கு அகப்படுத்தினான் என்பதை, “முள்ளூர் மன்னன் கழல் தொடிக் காரி, செல்லா நல்லிசை நிறுத்த வல்வில், ஓரிக் கொன்று சேரலற் கீத்த, செவ்வேர்ப் பலவின் பயங்கெழு கொல்லி” (அகநா. 209) என்ற அடிகளால் அறியலாம்.


மலையாளிகள் :

மலையாளிகள் என்று சொல்லக் கூடிய இவ்வினத்தார், சேர்வராயன் மலை, கொல்லி மலை, கல்ராயன் மலை, பச்சை மலை, சித்தேரி மலை ஆகியவற்றில் வாழும் பழங்