பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

69

கருதி, அக்காலக்கைம் பெண்களைப் போல் வீடுகளுக்குத் தீயிட்டு அந்நெருப்பில் தாங்களும் வீழ்ந்து மடிந்தனர். மூன்றாம் நாள் மழை விட்டு வீடு திரும்பிய மூன்று சோதரரும், இல்லமும் இல்லக் கிழத்தியரும் வெந்து நீறானதைக் கண்டனர்; வருந்தினர்; ஏங்கி அழுதனர். அவ்வாற்றாமை தணிந்ததும் மூவரும் வேறு மகளிரை மணமுடித்துக் கொண்டனர். பெரியண்ணன் ஒரு கைக்கோள மாதைக் கடிமணம் புரிந்து கொண்டு, கல்ராயன் மலையில் குடி புகுந்தான். நடுவண்ணன் ஒரு வேடர்குல மகளை மணந்து கொண்டு பச்சை மலையில் வாழச் சென்றான். சின்னண்ணன் தேவேந்திரப் பள்ளர் குலத்தில் பெண்ணெடுத்துக் கொண்டதோடு, கொல்லிமலையை வாழ்விடமாகக் கொண்டான். இம்மூவரின் வழிவந்தோரே பெரிய மலையாளிகள் என்றும், பச்சை மலையாளிகள் என்றும், கொல்லி மலையாளிகள் என்றும் மூன்று பிரிவினராக வாழ்கின்றனர்.


பிரிவுகள் :

மணமுறையின் அடிப்படையில் பல பிரிவு (exogamous clans) களாகப் பிரிந்து இவர்கள் வாழ்கிறார்கள். அப்பிரிவுகளுக்கு ‘வகுப்புகள்’ என்று பெயர். இவ்வகுப்புகளில் சிலவற்றை ஒன்று சேர்த்துத் ‘தாயாதி வகுப்பு’ என்று வழங்குகின்றனர். இத்தாயாதி வகுப்பினர் தங்களை, ‘அண்ணன் தம்பியர்’ என்று அழைத்துக் கொள்கின்றனர். ஒரு தாயாதி வகுப்பினர் தங்களுக்குள் பெண்ணெடுத்துக் கொள்ளும் வழக்கமில்லை. வேறு தாயாதி வகுப்பிலேயே பெண் கொள்வர். எடுத்துக்காட்டாகச் சித்தூர் நாட்டிலுள்ள மலையாளிகள் ஏழு வகுப்புகளாகப் பிரிந்து வாழ்கின்றனர். அவர்களில் ஐந்து வகுப்பினர் (பீலன், மூக்காண்டி, பூசன், மாணிக்கன், திருவிச்சி) ஒரு தாயாதி வகுப்பினராகவும், எஞ்சியுள்ள இரண்டு வகுப்பினர் (கண்ணன், தில்லான்)