பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

70

வேற்றுத் தாயாதி வகுப்பினராகவும் கருதப்படுகின்றனர். இவ்விரண்டு தாயாதி வகுப்பினரில் முன்னவர் பின்னவரிடத்தும், பின்னவர் முன்னவரிடத்துமே பெண் கொள்ளலாம். புலி நாட்டைச் சேர்ந்த மாட்டாயன், இமையாண்டி, கண்ணாதன், அலாத்தி, புன்னன் என்ற ஐந்து கூட்டத்தாரும் ஒரு தாயாதி வகுப்பைச் சேர்ந்தவர்கள். மூனூர் மலையாளிகளில் கோனான் வகுப்பார், மேற்கூறிய திருப்புலி நாட்டு முதல் மூன்று வகுப்பாரிடமும் பெண் கொள்ளமாட்டார்கள். பின்னிரு வகுப்பாரிடம் பெண் கொள்ளுவார்கள். பச்சைமலையாளிடையே ஐம்பது வகுப்புக்கள் உண்டு. அவ்வைம்பது வகுப்பாரும் எட்டுத் தாயாதிக் கூட்டங்களாகப் பிரிந்து வாழ்கின்றனர். இவ்வகுப்புக்களெல்லாம் பழமையானதும் வேடிக்கையானதுமான பெயர்களைத் தாங்கி , மொழியாராய்ச்சியாளரின் எண்ணத்தை ஈர்க்கின்றன.


வாழ்க்கை முறை :

சின்னண்ணன் வழிவந்த கொல்லி மலையாளிகள் பழமை விரும்பிகள்; ஒழுங்கு படுத்தப்பட்ட அமைப்புக்குட்பட்டவர்கள். இவர்கள் நாமக்கல், ஆத்தூர் வட்டங்களிலுள்ள கொல்லி மலையிலும், போத மலையிலும், போத மலைக்கும் ஜெருகுமலைக்கும் இடைப்பட்ட பள்ளத்தாக்கிலும், பால மலையிலும், பருகூர் மலையிலும், காளி மலையிலும் வாழ்கின்றனர். கொல்லி மலையில் இவர்கள் நான்கு பிரிவினராகப் பிரிந்து வாழ்கின்றனர். இவர்களில் முதல் இரண்டு பிரிவினரான முந்நாட்டு மலையாளிகளும், நானாட்டு மலையாளிகளும் முறையே நாமக்கல் வட்டத்தில் உள்ள சேலூர், வேலப்பூர் என்ற இடங்களில் பெரும்பாலும் வாழ்கின்றனர். மற்ற இரண்டு பிரிவினரான அஞ்சூர் (ஐந்து ஊர்) மலையாளிகளும், மூனூர் (மூன்று ஊர்) மலையாளிகளும் ஆத்தூர் வட்டத்திலே வாழ்கின்றனர்.