பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

2

அலங்காரப் பெட்டகம் ! பண்டைத் தமிழ் வாழ்வைத் தெரியக் காட்டும் பண்ணமைப்பு !

இக்கொஞ்சு தமிழ்ப் பாட்டில் என் உள்ளத்தைக் குழையவிட்டு, தமிழகத்து மலைகளில் இரண்டு திங்கள் பித்தனைப்போல் சுற்றியலைந்தேன். சிலம்பில் சிரித்து, மேகலையில் மின்னி, சங்கப்பொழிலில் தவழ்ந்து விளையாடும் செந்தமிழ்க் குமரியோடு உறவுகொண்ட என் கவிதை உள்ளம், கபிலரும் பரணரும், அவ்வையும் ஆதிமந்தியும் வாழ்ந்த சங்க காலத்தை நோக்கிச் சிறகடித்துப் பறந்து சென்றது. இன்றைய விஞ்ஞான நாகரிகம் என் உள்ளத்தைவிட்டு நீங்கியது. ஈராயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட என்னரும் தமிழ் நாகரிகம் என் இதயத்தில் குடிப்புகுந்தது. நாற்புறச் சுவர்களுக்குள் இருந்து வரிவரியாகப் படித்த குறிஞ்சிக் கலியின் உண்மைப் பொருளை நேரில் கண்டு உணர்ந்தேன். குறிஞ்சிப்பாட்டின் விரிவுரையை இங்கு கூர்ந்து கற்றேன். அகநானூற்றுப்பாடல்களை இங்கு ஆழ்ந்து பயின்றேன். பண்டைத் தமிழ்க்குடியின் குறிஞ்சி வாழ்வு என் உள்ளத்தில் நிழலாடியது. அச்சங்க காலக் கனவிலேயே மூழ்கி என்றென்றும் இருந்துவிட்டால் என்ன என்று என் உள்ளம் ஏங்கியது.

வெள்ளையர் வாணிபத்திற்காக வந்து இறங்கிய போதுதான் நாகரிகம் என்னும் சரக்கையும் தங்கள் கப்பலிலிருந்து தமிழகத்தில் கொட்டினார்கள் என்று எண்ணும் வழக்கம் சில மேதாவிகளிடையே இன்றும் இருந்து வருகிறது. குளிர் நாட்டில் வாழ்ந்த வெள்ளைத்துரைமார்கள் தமிழகத்துக் கொதிக்கும் வெயிலுக்கு ஆற்றாமல் உதகைக்கும், கோடைக்கானலுக்கும் ஓடினர். ஆங்கில நாகரிகத்தைச் செம்மறியாட்டைப் போல் பின்பற்றிய நம் நாட்டுச் செல்வர்களும், வெள்ளையரின் வாலைப்பிடித்துக்கொண்டு குறிஞ்சி நகரங் (Hill Stations) களுக்கு ஓடினர். கோடையில்