பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

78

சமவெளியிலுள்ள மக்களிலிருந்து மலையாளிகளைத் தனியாகப் பிரிக்கும் இப் பழக்க வழக்கங்கள், அவர்களுடைய முன்னோர்களான கேரளத்தாரிடமிருந்து பெறப்பட்டவையே என்று எல்லாரும் கருதுகின்றனர். மற்ற மலையாளிகளைவிடக் கொல்லி மலையாளிகள் தங்களுடைய பரம்பரைப் பண்பாடுகளினின்றும் மாறு படாதவர்களாகவே காணப்படுகின்றனர். மேற்கூறிய பழக்க வழக்கங்களைவிட, இவர்கள் கடைப்பிடித்து வரும் மண முறைகளும், பல ஆடவர்களை ஒரு பெண் கணவராக ஏற்றுக்கொள்ளும் முறை (Polyandry) யும், கேரள மக்களோடு இவர்களை நெருங்கிய தொடர்புடையவர்களாக ஆக்குகின்றன. ஏனென்றால் பல கணவர் கொள்ளும் இம்முறை நாயர்களிடமும், அவர்களைச் சார்ந்த இனத்தாரிடமும் இன்றும் அருகிக் காணப்படுகின்றது.

மேனரீகம் :

மேனரீகம் என்பது தமிழ் நாட்டிலும், ஆந்திர நாட்டிலும் பரவலாகக் காணப்படும் ஒரு வகை மண முறை. ஓர் இளைஞனுக்கு, அவனுடைய தாய் மாமன் மகளே ஏற்ற மணப் பெண்ணாகக் கருதப்படுகிறாள். தாய் மாமன் வீட்டில் பெண்ணில்லையென்றால் அத்தை மகள் மணத்திற்கு உரியவளாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறாள். சில சாதியாரிடையே உடன்பிறந்த தமக்கையின் மகளை மணக்கும் உரிமை போற்றப்படுகிறது. இம் முறைகளின்படி மணக்கும் பெண்ணை 'உரிமைப் பெண்' என்பர். அதுவும் நிறைந்த செல்வத்தோடும் நிலபுலன்களோடும்வந்து கணவன் பொருளாதாரத்தை உயர்த்துபவளாக இருந்தால் அவளைப் 'பெருமைப் பெண்' என்றும் கூறுவர். இம் முறைகளை மீறிப், பெண் கொடுக்கவோ அல்லது பெண் எடுக்கவோ யார் மறுத்தாலும் அச் செயல் பெருங் குற்றமாகக் கருதப்படும்.