பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

3

குறிஞ்சி நகரங்களில் வாழ்வதை நாகரிகம் என்றும் கருதினர். மலை வாழ்க்கையைக்கூட வெளி நாட்டார் தாம் நமக்குக் கற்றுக் கொடுத்ததாகக் கருதினர். பாவம்! நம் இலக்கியத்தில் பரந்து கிடக்கும் குறிஞ்சித் திணை அவர்கள் கண்ணில் படுவதில்லை.

உலகில் வழங்கும் வளர்ச்சியுற்ற மொழிகளிலெல்லாம் எழுத்து, சொல், யாப்பு, அணி என்ற நான்கிற்கும் இலக்கணம் உண்டு. ஆனால் வாழ்க்கைக்கும் இலக்கணம் அமைத்து அதன்படி வாழ்ந்த பெருமை, பரவைசூழ இப்பரந்த உலகில் தமிழருக்கேயன்றி வேறு யாருக்கும் கிடையாது. அவ்வாழ்க்கை இலக்கணத்தை அகம், புறம் எனத் தமிழர் இரு கூறாக்கினர். அவ்விலக்கணத்தின் அடிப்படையிலேயே தமிழ் இலக்கியங்களெல்லாம் தழைத்து வளர்ந்தன.

அக வாழ்க்கை காதல் வாழ்க்கையாகும். ஒத்த காதல் வயப்பட்ட ஓரிளைஞனும் குமரியும், துய்த்த இன்பத்தை இன்னதென வெளியில் கூற இயலுமோ? கற்றறிந்த காதல் மொழியையும், காதலன்பால் உற்றறிந்த இன்ப உணர்வையும் அகத்தில் பொதிந்து வைத்து, எண்ணி எண்ணி இன்பவெறி கொள்வாளே தவிர எந்தப் பெண்ணும் வெளியில் கூறமாட்டாள். கொஞ்சுமொழிக் கோதையிடம் பயின்ற காதல் விளையாட்டை, நெஞ்சில் நிறுத்தி நினைவைத் தேனாக்கி வாழ்வானே தவிர, எந்த ஆடவனும் வெளிக்கூறான். இவ்வாறு அகத்தோடமைந்த அன்புடை வாழ்க்கை ‘அகம்’ எனப்பட்டது. அவ்வாறன்றி, தம் வாழ்வில் துய்த்த இன்ப துன்பங்களைப் பலரும் அறிய வெளிப்படக் கூறும் தகுதியுடையது புறம் எனப்பட்டது. அகம் என்றால் இன்பத்தை மட்டும் குறிப்பதன்று. துன்பமும் காமத்தைச் சார்ந்து நிகழுமாயின் அது அகத்திலும், பிற சார்பு பற்றித் தோன்றுமாயின் அது புறத்தி