பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

85

நாளிலோ வீட்டைத் தூய்மைப் படுத்தித் தாயை வீட்டுக் கழைப்பர். ஆனால் பச்சை மலையாளிகள் முப்பதாம் நாள் வரையில் விலக்கு நாட்களாகக் கருதுவர். குழந்தைக்குப் பெயர் சூட்டுவதற்கென்று, குறிப்பிட்ட எந்தச் சடங்கும் கிடையாது. எப்பொழுது பெயர் சூட்டுவது என்ற வரையறையும் இல்லை. கொல்லி மலையாளிகள் குழந்தை பிறந்த பத்தாம் நாளிலோ அல்லது மூன்றாம் திங்களிலோ பெயரிடுவர். பச்சை மலையிலுள்ளவர்கள் முதல் ஆண்டின் இறுதியிலும், சேர்வராயன் மலையிலுள்ளவர்கள் மூன்றாம் நாளிலும் பெயரிடுவர். பெயரிடுவதற்கு முன்பாக, எந்தப் பெயர்வைப்பது யென்பது பற்றி அவ்வூரிலுள்ள பூசாரியைக் கலந்து கேட்பர். சில சடங்குகட்குப் பிறகு பூசாரி மருள் கொண்டு ஆடி, அக்குழந்தைக்கு இடவேண்டிய பெயரைக் கூறுவான். எப்பொழுதும் கடவுளின் பெயர்களையே குழந்தைகட்குப் பெரும்பாலும் இடுவர். ஆணாக இருந்தால் கொங்கன், வடமன், சீரங்கன், பிடவன், காளி, அறப்பளி என்றும், பெண்ணாக இருந்தால் கொங்காயி, வடமி, சீரங்கி, பிடாரி என்றும் பெயரிடுவர். கரியன், வெள்ளையன், குட்டையன், சடையன், பெரிய பையன், சின்னப் பையன் எனக் காரணப் பெயர்களும் இடுவதுண்டு.

ஆடை அணிகள் :

மலையாளிப் பெண்கள் இரவிக்கை அணிவதில்லை. வீட்டிலிருக்கும்போதும், வயல்களில் வேலை செய்யும் போதும் உடலின் மேற்பகுதி திறந்தே இருக்கும். வேற்றார் முன்னிலையில் வரும்போதும், சந்தைக்குச் செல்லும்போதும் ஆடையின் முன் தானையைத் தளர்த்தி மார்பைப் போர்த்து, இடது தோளின் மேல் கொணர்ந்து முதுகுப்புறம் தொங்க விடுவார்கள். பச்சை மலையாளிகள் எப்பொழுதும் வண்ண ஆடைகளையே விரும்புவர். பச்சை மலையாளிப் பெண்கள்