பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

86

திருமணத்தின்போது மட்டும் வெள்ளை நிறமான கூறை (புத்தாடை) அணிவர். மற்ற நேரங்களில் சிகப்பு அல்லது கருப்பு ஆடைகளையே அணிவர். ஆனால் பளிச் சென்றிருக்கும் மஞ்சள், ஆரஞ்சு, பச்சை நிறப் புடவைகளின்மீது அவர்கட்கு விருப்பமதிகம். ஆண்கள் அணியும் ஆடை கோவணம் ஒன்றுதான். ஆனால் அதில் கூட வண்ணத்தை விரும்புவர். கொல்லி மலையாளிப் பெண்கள் இடது பக்கமும். பச்சை மலையாளிப் பெண்கள் வலது பக்கமும் மூக்குக் குத்திக் கொள்வர். பெரிய மலையாளிப் பெண்கள் மூக்கே குத்திக் கொள்வதில்லை. பச்சை நிறமானதும், இரத்தச் சிவப்பு நிறமானதுமான கண்ணாடிகள் பதித்த காது வளையங்களை அணிவர்.

இறுதிச் சடங்கு :

மலையாளிகள் பொதுவாக, பிணங்களைப் புதைக்கும் பழக்க முடையவர்கள். ஆனால் காலரா, தொழுநோய் முதலியவற்றால் பீடிக்கப்பட்டு இறந்தவர்களுடைய பிணங்களுக்குப் 'பால் தெளிக்கும் சடங்கு' கிடையாது. மற்றச் சடங்குகளெல்லாம் சமவெளியிலுள்ளவற்றைப் போலவே இருக்கின்றன. பிணத்தைத் தூக்கிச் செல்லும் பாடையை அவர்களும் 'தேர்' என்றே கூறுகின்றனர். தீட்டு நாட்கள் இடத்திற்கு இடம் மாறுபடுகின்றன. பச்சை மலையில் இத்தீட்டு நாட்கள் ஒரு திங்கள் வரை நீடிக்கும். ஊத்தங்கரை வட்டத்திலுள்ள பச்சை மலையாளிகள் 10 நாட்களும், பெரிய மலையாளிகள் 12 அல்லது 15 நாட்களும், கொல்லி மலையாளிகள் 3 நாட்களும் தீட்டாகக் கருதுவர். இறந்தவர்களுடைய ஆவி சில நாட்கள் வீட்டைச் சுற்றி அலையும் என்று கருதுகிறார்கள். அதைத் திருப்திப் படுத்துவதற்காகப் பூசாரி கூறும் முறைப்படி கோழி, ஆடு, பன்றி முதலியவற்றைப் பலியிடுவர். ஓர் இருப்பாணியையோ அல்லது முளையையோ புதைகுழியில் பிணத்தின்