பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

87

தலைக்கு நேராக அடித்து, அவ்வாவியை வீட்டின் பக்கம் வராமல் தடுப்பர். இறந்துபோன முன்னோரை வழிபடுவதற்காக அவர்கள் 'சிரார்த்தம்' செய்வதில்லை. ஆனால் திருமணம், மகப்பேறு, பூப்பெய்தல் முதலிய நிகழ்ச்சிகள் நடைபெறும் போதும், விழாக் காலங்களிலும், வெள்ளிக் கிழமைகளிலும் இறந்தோருக்கு வழிபாடு செய்யும் வழக்கம் இவர்களிடம் உண்டு. இவ்வாறு வணங்கும் முன்னோர்களை 'வீட்டுத் தெய்வங்கள்' என்றும், 'பட்டவன்' என்றும் இவர்கள் கூறுகின்றனர். மலையாளிகள் தங்கள் இல்லங்களை மிகவும் புனிதமான இடங்களாகக் கருதுகின்றனர். பார்ப்பனப் புரோகிதரைக்கூட, செருப்புக் காலோடு இவர்கள் வீட்டிற்குள் அனுமதிப்பதில்லை. சமய வாழ்வு : மலையாளிகள் சிவபெருமானையும் திருமாலையும் வேறுபாடின்றி வணங்குகின்றனர். நாள்தோறும் திருநீறு அணியும் வழக்கத்தைக் கடைப் பிடிக்கின்றனர். ஆனால் சில குறிப்பிட்ட சமய வழிபாட்டின் போது மட்டும் திருமண் (நாமம்) சார்த்திக் கொள்கின்றனர். தங்களுடைய கோயில்களில் தங்கள் இனத்தாரையே அர்ச்சகர்களாக அமர்த்தியிருக்கின்றனர். மலையாளிகளின் வழிபாட்டிற்கு உரிமை பெற்ற பெருந் தெய்வம் திருமாலின் அவதாரமான கரிராமன். அவன் கோயில்கொண்டு எழுந்தருளியிருக்கும் இடங்களில் தலைமையானது பெரிய கல்ராயன் மலையிலிருக்கும் 'மேல் நாட்டை'ச் சார்ந்த 'கோயில் புதூர்' ஆகும். தம்மம்பட்டியிலும் கரிராமனுக்குக் கோயில் உண்டு. சேர்வராயன் மலைமீதுள்ள கரடியூரிலும் இக்கடவுளுக்குக் கோயில் எடுக்கப்பட்டுள்ளது. இது உருவத்தில் கோயில் புதூரிலிருக்கும் கோயிலைப் போன்றே உள்ளது சேர்வராயன் மலையிலுள்ளோர் அங்கு எழுந்தருளியிருக்கும் கடவுளைக் 'கரிய பெருமாள்'