பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

88

என்றே அழைக்கின்றனர். சேலத்திற்கு அண்மையில் ஒரு குன்றின்மேல் கரியபெருமாள் கோயில் உள்ளது, அக்குன்று 'கரியபெருமாள் மலை' என்ற பெயர் கொண்டு விளங்குகிறது.

கோயில் புதூரிலிருக்கும் கரிராமன் கோயிலில் பரமசிவன், பார்வதி, திருமால், இலக்குமி, விநாயகன் ஆகியோரின் படிமங்கள் உள்ளன, அவற்றோடு பன்னிரண்டு நடுகற்களும் வெண் புள்ளி சார்த்தப்பட்டு, இரண்டு வரிசைகளாக நிற்கின்றன. கோயிலின் வாயிலைச் சங்கு சக்கரங்களும், நாமமும், திருமால், இராமன் உருவங்களும், நான்கு கருடனும், நான்கு நந்தியும் அழகு செய்கின்றன. ஒவ்வொரு சனிக்கிழமையும், அக் கோயிலில் வழிபாடு நிகழ்கின்றது. ஆண்டு தோறும் மாசி மாதத்தில் ஒரு தேர்த் திருவிழாவும் அங்கு நடைபெறுகின்றது. அக் கோயிற் பூசாரி புலால் உண்ணக் கூடாது. உயிர்ப் பலி நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ளக் கூடாது. புலால் உண்போரின் உடனமர்ந்து உண்ணக் கூடாது. கரி ராமன் கோயிலில் உயிர்களைப் பலியிடும் வழக்கம் எப்பொழுதும் கிடையாது. அத்தகைய நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டவர்கள், மூன்று நாட்கள் கடந்த பிறகுதான் கோயிலுக்குள் நுழைய வேண்டும். மலையாளி ஆண்களும், பெண்களும் அக் கோயிலுக்குச் சென்று முடி எடுக்கும் வழக்கத்தை மேற்கொண்டிருக்கின்றனர்.

கொல்லி மலைச் சரிவில் வேலப்பூர் நாட்டில் ஒரு சிவன் கோயில் உள்ளது. அங்கு எழுந்தருளியிருக் கும் இறைவன் 'அறப்பளீசுவரன்' என்று அழைக்கப் படுகிறான். மற்ற மலையாளிகள் கோயிலைப் போலல்லாமல், இங்குப் பார்ப்பனக் குருக்கள் அர்ச்சகராக அமர்த்தப்பட்டிருக்கிறார். இவ் விறைவன்மீது அம்பல வாணக் கவிராயர் என்பவர் ஒரு சதகம் பாடியுள்ளார், (சதம் என்றால் நூறு. சதகம் என்றால் நூறு பாடல்