பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

91

எடுக்கின்றனர். உமையின் வடிவமான காமாட்சியைப் பல இடங்களில் கோயில் கட்டி வழிபடுகின்றனர். பல இடங்களில் தருமராசர் கோயில் இருப்பதால் பாண்டவர் வழிபாடும் மலையாளிகளிடையில் இருந்திருக்க வேண்டும் என்று அறியப்படுகிறது.

மலையாளிகள் வணங்கும் சிறு தெய்வங்கள் (Demi Gods) கணக்கிலடங்காதவை. சக்தியின் அவதாரங்ளான காளி, பிடாரி, மாரி முதலிய தெய்வங்கட்கு எங்கு பார்த்தாலும் கோயில்கள் உள்ளன. அய்யனாருக்கும் கோயில் உண்டு. சித்திரை அல்லது வைகாசித் திங்களில் எடப்புலி நாட்டில் காளி தேவிக்குத் தேர் விழா நடத்துகின்றனர். சனிக்கிழமை, காளி தேவியின் வழிபாட்டிற்குகந்த நாளாகக் கருதப்படுகிறது. பிடாரி என்ற தெய்வம், பெரிய பிடாரி, சின்னப் பிடாரி, சொக்கப் பிடாரி, புதுப் பிடாரி, கரும் பிடாரி, காரக் காட்டுப் பிடாரி, மலுங்குப் பிடாரி எனப் பல அடை மொழிகளோடு மலையாளிகளால் அழைக்கப்படுகிறது பிடாரிக்குரிய வழிபாட்டு நாளும், ஆண்டு விழாவும் நாட்டுக்கு நாடு மாறுபடுகின்றன. சிறு தெய்வங்களுக்கான விழாக்களில் சிறப்பானது மாரியம்மன் திருவிழாவாகும். இவ்விழா வசந்த காலத்தில் (தை, மாசி, பங்குனி) முழு நிலா நாட்களில் கொண்டாடப் படுகிறது. செவ்வாய்க்கிழமையும், வெள்ளிக்கிழமையும் மாரியம்மன் வழிபாட்டிற்குகந்த நாட்கள். நாச்சியம்மன், பொங்கலாயி, கொங்கலாயி, பொன்னாயி என்பவை வேறு பல குறிப்பிடத்தக்க பெண் தெய்வங்கள். மேல நாச்சி, கொடைகரை நாச்சி, அரிய நாச்சி, இளைய நாச்சி, எழுகரை நாச்சி எனப் பல பெயர்களோடு நாச்சி காட்சியளிக்கிறாள். அவள் வழிபாட்டுக்குகந்த நாள் வியாழக்கிழமையாகும். வழிபடும்போது நாச்சியார் கோயிலில் நிறைந்த அமைதி நிலவல் வேண்டும். வழிபாட்டின் இறுதியில் படையல் (பிரசாதம்) எல்லாருக்கும் வழங்கப்படும். வேடர்களைக்