பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

92

காக்கும் குல தெய்வமாக நாச்சி கருதப்படுகிறாள். கொல்லி மலையில் இவளுக்கு நிறையக் கோயில்களுண்டு, நடுவண்ணனை மணந்த வேடச்சியிடமிருந்து, நாச்சியம்மன் வழிபாடு மலையாளிகளிடையே பரவிற்று என்பர். பொங்கலாயி, குசக்குழிப் பொங்கலாயி, மயிலாத்திப் பொங்கலாயி, தண்ணிப் பாழிப் பொங்கலாயி, வேலராயன் பொங்கலாயி, மூலைக்காட்டுப் பொங்கலாயி, பணிக்கன் காட்டுப் பொங்கலாயி, பேய்க் காட்டுப் பொங்கலாயி எனப் பல அடை மொழிகளோடு, பொங்கலாயி என்னும் சிறு தெய்வம் மலையாளிகளிடையே கோயில் கொண்டு விளங்குகிறாள்.

அய்யனார், பெரிய ஆண்டவன், ஆண்டியப்பன், நம்பியாண்டான், சடையன், வெட்டுக்காரன், மாசி மலையன், உருளையன் என வேறுபல சிறு தெய்வங்களும் உண்டு. ஆனால் கருப்பனார் வழிபாடு மலையாளிகளிடையே மிகுந்து காணப்படுகிறது. ஒவ்வொரு ஊரிலும் கருப்பனாருக்குக் கோயிலுண்டு. பன்றிப்பலி கருப்பனாருக்கு விருப்பமான ஒன்று. கன்னியம்மாள் என்ற பெண் தெய்வம் கருப்பனாரோடு தொடர்புபடுத்திக் கூறப்படுகிறது.

பொதுவாகச் சிறு தெய்வங்களுக்கு, முறையாகக் கட்டப்பட்ட கோயில்கள் கிடையா, திறந்த வெளியிலோ அல்லது கூரையில்லாத சுவர்களுக்கு நடுவிலோ சிறு தெய்வங்களின் உருவங்கள் அமைக்கப்பெற்றிருக்கின்றன. குறிப்பாகக் கருப்பனார் கோயில் எல்லா இடங்களிலும் இவ்வாறே அமைக்கப்பட்டுள்ளது. மலையாளிகளே இக்கோயில்களின் பூசாரிகளாக உள்ளனர். அவர்களைத் 'தாசன்' என்றும் 'ஆண்டி' என்றும் அழைக்கின்றனர். இக்கோயிற் பணி அவர்களுக்குப் பரம்பரை உரிமையுடையது. ஒரே பூசாரி பல கோயில்களிலும் பணிபுரிவதுண்டு. தலைப்பாகையும், நீண்ட முடியும் இவர்களை மற்ற மலையாளிகளி