பக்கம்:தமிழக ஆட்சி.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆராய்ச்சிக்குரிய மூலங்கள்

5



கலிங்கத்துப்பரணி, மூவர் உலா என்பவை சமகால நூல்களாகும். முதற்குலோத்துங்கனது கலிங்கப்படையெடுப்பை விளக்கி அவனது அவைப்புலவரான சயங்கொண்டிார் பாடியதே கலிங்கத்துப்பரணி. விக்கிரம சோழன், அவன் மகனை இரண்டாம் குலோத்துங்கன், அவன் மகனுன இரண்டாம் இராசராசன் ஆகியோர் காலங்களில் அவர்தம் ஆசிரியரும் அவைப்புலவரும் ஆகிய ஒட்டக்கூத்தரால் பாடப்பெற்றவையே மூன்று உலா நூல்கள். பேரரசன் போர்ச் செயல்கள், அறப்பணிகள், ஆடை அணிச் சிறப்புக்கள், அவனது ஆட்சி முறை, ஆட்சிக்கு அடங்கிய சிற்றரசர் பெயர்கள், முன்னோர் வீரச்செயல்கள் இன்ன பிறவும் இச்சிறு நூல்களில் இடம்பெற்றுள்ளன.

பெரியபுராணம் பல்லவர் காலத்தில் வாழ்ந்த நாயன்மார் வரலாறுகளைக் கூறுவதாயினும், அதனைச் செய்த சேக்கிழார் இரண்டாம் குலோத்துங்க சோழனது முதலமைச்சர் ஆதலால், அவர் நூலில் கூறப்பட்டுள்ள ஆட்சி பற்றிய செய்திகள் ஒரளவு பல்லவர் காலத்தைப் பற்றியனவாகவும், பேரளவு சோழர் காலத்தைப் பற்றியனவாகவும் கொள்வது பொருத்தமாகும். இது சோழரைப் பற்றிய செய்திகளைக் குறிக்கும் பொழுது மட்டும், ஆட்சி பற்றிய அளவில், சமகால இலக்கியமாகக் கருதலாம்.

இரட்டையர், காளமேகப்புலவர் போன்ற புலவர் நூல்களும் பாக்களும் விசயநகர ஆட்சிக்காலத்திலும் நாயக்கர் காலத் திலும் பாடப்பட்டவை யாதலால், இச்சம கால நூல்களிலும் தனிப்பாடல்களிலும் கூறப்பெற்றுள்ள பல செய்திகள் சிறந்த சான்றுகளாகக் கொள்ளற்பாலனவாகும்.


(3) அயல்நாட்டார் குறிப்புக்கள்

சேர சோழ பாண்டியர் பெயர்கள் வடமொழி நூல்களிலும் அசோகன் கல்வெட்டுக்களிலும் காணப்படுகின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_ஆட்சி.pdf/12&oldid=1457817" இலிருந்து மீள்விக்கப்பட்டது