பக்கம்:தமிழக ஆட்சி.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆராய்ச்சிக்குரிய மூலங்கள்

7



விவரங்களை அறிய உத்தரமேரூர்க் கல்வெட்டுப் பெருந்துணை செய்கின்றது. சோழர் கல்வெட்டுக்களிலும் பட்டயங் களிலும் சோழர் ஆட்சியிலிருந்த படைகளைப் பற்றிய விவரங்கள், போர்ச் செயல்கள், நீதிமுறை, அரசாங்க உயர் அலுவலர், பல வகை வரிகள் பற்றிய விவரங்கள் என்பன போன்ற பல செய்திகள் அறியக் கிடக்கின்றன. விசய நகர ஆட்சியிலும் நாயக்கர் ஆட்சியிலும் இவ்வாறே தமிழக ஆட்சி பற்றிய பல விவரங்கள் தெரிகின்றன. எனவே, இலக்கியங்களைக் கொண்டு அறிய முடியாத பல செய்திகளைக் கல்வெட்டுக்களைக் கொண்டு நாம் நன்கு அறியலாம்.

(5) கட்டடங்கள் முதலியன

இத்தலைப்பில் பல்லவர், சோழர், பாண்டியர், நாயக்கர், மகாராட்டிரர் இவர்களால் கட்டப்பட்ட கோவில்கள், அரண்மனைகள், அவற்றில் உள்ள ஒவியங்கள், சிற்பங்கள், அரசர் அரசியர் தனி உருவச் சிற்பங்கள் முதலியன அடங்கும். காஞ்சி வைகுந்தப் பெருமாள் கோவில் சுவர்ச் சிற்பங்கள் பல்லவர் வரலாற்றையும், பல்லவ மன்னனது முடிபுனை விழாவையும் நமக்கு அறிவிக்கின்றன. மாமல்லபுரத்து ஆதிவராகர் கோவிலில் உள்ள உருவச் சிற்பங்கள் பல்லவ அரசர்க்கு எத்துணை மனைவியர் இருந்தனர் என்பதை உணர்த்துகின்றன. தாராசுரம் சிவன் கோவிலில் உள்ள இரண்டாம் இராசாதிராசன், அவன் கோப்பெருந்தேவி ஆகிய இருவரும் முடி அணிந்த நிலையில் இருத்தல உணர்த்தும் உருவச் சிற்பங்கள் சோழர் கால அரச முடி, அணிகள் முதலியவற்றை நமக்கு உணர்த்துகின்றன.

சித்தன்னவாசல் நடிகையர் ஓவியங்கள் பல்லவர் கால நடிகையரைப் பற்றிய விவரங்களை நமக்கு ஓரளவு தெரிவிக்கின்றன. இவ்வாறே தஞ்சைப் பெரிய கோவிலில் காணப்படும் ஆடல்-பாடல் மகளிரைக் குறிக்கும் ஓவியங்கள் சோழர் காலக் கலைவாணிகளைப் பற்றிய விவரங்களை அறி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_ஆட்சி.pdf/14&oldid=504893" இலிருந்து மீள்விக்கப்பட்டது