உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக ஆட்சி.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10

தமிழக ஆட்சி



இலங்கி வருகின்றன. எனவே, இவையும் தமிழக ஆட்சி யின் நிலையை அறிய உறுதுணையாய் இருக்கின்றன.

அறிஞர் ஆராய்ச்சி நூல்கள்

இதுகாறும் கூறப்பெற்ற பலவகைச் சான்றுகளைக் கொண்டு இக்கால ஆராய்ச்சி அறிஞர்கள் பல்லவர் வரலாறு, சோழர் வரலாறு, பாண்டியர் வரலாறு, விசய நகர வேந்தர் வரலாறு, மதுரை-நாயக்கர் வரலாறு, தஞ்சை-நாயக்கர் வரலாறு, செஞ்சி வேந்தர் வரலாறு, தஞ்சை - மகாராட்டிரர் வரலாறு என்னும் வரலாற்று நூல்களைத் திறம்பட ஆராய்ந்து எழுதி வெளியிட்டு உள்ளனர். இவற்றுள் டாக்டர் மீனாட்சி எழுதிய ‘பல்லவர் ஆட்சிமுறையும் சமுதாய வாழ்க்கையும்’ என்னும் நூலும், பேராசிரியர் நீலகண்ட சாஸ்திரியார் எழுதியுள்ள ‘சோழர் வரலாறு,’ ‘சோழர் ஆட்சிமுறை’ என்னும் நூல்களும், டாக்டர் மகாலிங்கம் எழுதியுள்ள விசய நகர வேந்தரின் ஆட்சி முறையும் சமுதாய வாழ்க்கையும், என்னும் நூலும் சிறப்பாகக் குறிக்கத்தக்கவை.

காலஞ்சென்ற வரலாற்றுப் பேராசிரியர் வி. ஆர். இராமசந்திர தீட்சிதர் மெளரிய ஆட்சி பற்றிய சிறந்த ஆராய்ச்சி நூலை 1932- இல் வெளியிட்டார். தென்னிந்திய அரசுகளைப்பற்றி அறிய அத்தகைய ஆராய்ச்சி நூல் இல்லாதிருந்த குறையைச் சென்னை பல்கலைக்கழக வரலாற்றுத் துறை அறிஞர் டாக்டர் மகாலிங்கம் என்பவர் நீக்க விழைந்து, ‘தென்னிந்திய ஆட்சி’ என்னும் பெயரில் 1955 இல் சிறந்த ஆராய்ச்சி நூலை வெளியிட்டனர். தென்னிந்தியாவில் அரசாண்ட சாளுக்கியர், இராட்டிரகூடர், ஆந்திரர், பல்லவர், சேரர், சோழர், பாண்டியர், விசய நகர வேந்தர், நாயக்கர், மாகாராட்டிரர் ஆகியோர் வரலாறுகளை ஆராய்ந்து, தென்னிந்திய ஆட்சி பற்றிய செய்திகள் அதன் கண் தரப்பட்டுள்ளன. இவை அனைத்தின் துணையைக் கொண்டே இந்நூல் எழுதப்படுகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_ஆட்சி.pdf/17&oldid=1457816" இலிருந்து மீள்விக்கப்பட்டது