பக்கம்:தமிழக ஆட்சி.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14

தமிழக ஆட்சி



சமயத்தில் பாண்டியன் பெருமை பெற்று விளங்கினன். ஒவ்வொருவனும் மற்ற இருவரையும் அடக்கி ஆள நினைத்த காலங்களும் உண்டு. சேரருள் செங்குட்டுவனும், சோழருள் கரிகாலனும், பாண்டியருள் தலையாலங்கானத்து செரு வென்ற நெடுஞ்செழியனும் சிறப்புற்ற வேந்தராவர். இந்த முதன்மைவெறி இம் மரபுகள் அழியும் வரையில் பின் நூற் முண்டுகளிலும் நிலைத்திருந்தது என்பதை வரலாறு தெரிவிக்கின்றது.

கடைச் சங்ககாலம் என்பது ஏறத்தாழக் கி. மு. 300 முதல் கி. பி. 300 வரை என்று சொல்லலாம். கி. மு. 300- க்குப் பிறகு தமிழகத்தின் பெரும்பகுதி (தொண்டை, சோழ நாடுகள்) பல்லவர் என்ற புதிய மரபினர் ஆட்சிக்கு உட்பட்டது. ஏறத்தாழக் கி. பி. 9-ஆம் நூற்றாண்டின் இறுதியில் சோழர் தம் பேரரசைத் தோற்றுவித்தனர். கி. பி. 11, 12 ஆம் நூற்றாண்டுகளில் சோழப்பேரரசர் தென்னிந்தியா முழுவதையும் ஒரு குடைக்கீழ் வைத்து ஆண்டனர்; இலங்கை முதலிய பல தீவுகளைப் பிடித்து ஆண்டனர்; வட இந்தியாவிலும் கிழக்கிந்தியத் தீவுகளிலும் தங்கள் செல்வாக்கை நிலைநாட்டினர்.

கி. பி. 13-ஆம் நூற்றாண்டில் பாண்டியர் செல்வாக்கு ஒழிந்தது. கி.பி. 14-ஆம் நூற்றாண்டில் மாலிக்-காபூர் தென்னாட்டு அரசுகளை அழித்தார். பின்பு தமிழகம் விசயநகர வேந்தர் ஆட்சிக்கு உட்பட்டது. பின்பு விசயநகர வேந்தரின் பிரதிநிதிகளாக இருந்து மதுரை, தஞ்சாவூர், செஞ்சி என்னும் இடங்களை நாயக்க மன்னர் ஆண்டு வந்தனர். பின்னர் இந்நிலப் பகுதிகள் கருநாடக நவாபுகளின் ஆட்சிக்கு உட்பட்டது. தஞ்சையில் மகாராட்டிரர் சிறிதுகாலம் ஆண்டனர். பின்பு தமிழகம் வெள்ளையர் ஆட்சிக்கு உட்பட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_ஆட்சி.pdf/21&oldid=505213" இலிருந்து மீள்விக்கப்பட்டது