1. தோற்றுவாய்
உலக அரங்கில், தமிழ்நாடு உயர்ந்து விளங்கிய காலம் ஒன்று இருந்தது. உலகத்தார்க்கெல்லாம், அறுசுவை உணவளித்து அவர் உடலை ஒம்பியும், ஆன்ற அறிவு அளித்து, அவர் உயிரை ஓம்பியும் உயர்வுற்ற காலம் அது உலக நாடுகள் அனைத்தினும், அறிவில், ஆற்றலில், செல்வத்தில், பெருமையில், பொன்னில், பொருளில், நாகரீக நற்பண்பில் நனிசிறந்தது எங்கள் நாடு என்று, இன்று பெருமை கொள்ளும் நாடுகளெல்லாம்; தங்கள் உணர்வாலும் உணரலாகா. அத்துணை இருள் செறிந்துகிடந்த அக்காலத்தில், நாகரீகத்தின் நடுநாயகமாய், நல்லாட்சிக்கோர் எடுத்துக்காட்டாய், அறிவொளி வீசும் பெருநாடாய்ப் பெருமையுற்றிருந்தது நம் தமிழ்நாடு.
சிலம்பும், மேகலையும் சிறக்க அளித்த சேரர் கோவும் —சீத்தலைச்சாத்தனாரும், “தமிழகம்” எனப் பெயரிட்டு அழைக்கும் வட வேங்கடம், தென்குமரிகட்கு இடைப்பட்ட இந்நாட்டை, ஒல்காப் பெரும்புகழ்த் தொல்காப்பியனார், "வண்புகழ் மூ வ ர் தண்பொழில் வரைப்பு"1 எனப் பெயரிட்டுப் போற்றுவதால், தமிழகம், மிகப் பழைய காலத்திலிருந்தே சேர, சோழ, பாண்டிய மரபினரால் ஆளப்பட்டு வந்துளது, என்பது புலனாம்.